

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருமான வளர்ச்சி எதிர்பார்ப்பு நடப்பு நிதியாண்டில் 7 முதல் 9 சதவீதமாக, ஒற்றை இலக்கத்தில் இருக்கும் என்று தகவல் தொழில் நுட்பத்துறை மூத்த தலைவரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறு வனர்களில் ஒருவருமான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
தொழில்துறை அமைப்பான நாஸ்காம் 10-12 சதவீத வளர்ச்சி அடையும் என இதற்கு முன்பு அறிவித்திருந்தது. இது குறித்து அவர் கூறும்போது ஐடி துறையின் ஏற்றுமதி வளர்ச்சி வீதம் 7 முதல் 9 சதவீதத்துக்குள்தான் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இது மதிப்பீடு கிடையாது கணிப்புதான் என்று கூறினார்.
2008-ம் ஆண்டுடன் ஒப்பிடுகிற போது 2016-17 நிதியாண்டு இந்திய தொழில்துறைக்கு சவாலான ஆண்டு கிடையாது என்று அவர் குறிப்பிட்டார். குறுகிய கால அளவில் பார்க்கிறபோது இப்போது ஐடி துறை ஏற்ற இறக்கமான சூழல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ஒத்துழைப்பை பொறுத்து இது நிறுவனங்களின் வளர்ச்சியில் எதிரொலிக்கும்.
தற்போது இந்திய நிறுவனங் களுக்கு கடுமையான மற்றும் சவாலான நேரமாக இருந்தால் கூட நல்ல லாபம் ஈட்டி வருகின்றன. வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு முன்பு இருந்ததைவிட குறைவான வளர்ச்சிதான் என்றாலும் தற்போதும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்தான் உள்ளன.
பிரெக்ஸிட்டால் எழும் பாதிப்பு கள் குறித்து அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகே உணரத் தொடங்குவோம் என்றும் கூறினார்.
ஐடி துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தானியங்கி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணுணர்வு மற்றும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்கள் உள்ளன. இது வேலைவாய்ப்பிலும் எதிரொலிக்கிறது. நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் மீண்டும் பழைய வளர்ச்சியை எட்டுவோம். ஐடி துறையின் வருமானம் ரூ. 15,000 கோடி டாலர் என்கிற அளவில் இருக்கிறது.( இதில் ரூ. 12,000 கோடி டாலர் ஏற்றுமதி மூலமாக கிடைக்கிறது). இதில் 7-8 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. தொகை அடிப்படையில் பார்க்கும் போது 1,000 கோடி டாலர் வளர்ச்சி இருக்கும். இதன் மூலம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
நடுத்தர காலம் முதல் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்திய ஐடி துறையில் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உள்ளன. இதுபோன்ற ஒரு சவாலான நிலையை 2008-ம் ஆண்டு இந்த துறை கடந்து வந்திருக்கிறது இதன் காரணமாகவே நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி இருக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.