

ஹெச்சிஎல் நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 1,873 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்நிறுவனத்துக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்ததால் நிறுவன லாபம் 32.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 1,416 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் ஜூலை முதல் ஜூன் வரை நிதியாண்டாகக் கடைப்பிடிக்கிறது. இதன்படி இந்நிறுவனத்தின் முதல் காலாண்டு வருமானம் 9.7 சதவீதம் அதிகரித்து ரூ. 8,735 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 7,961 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் லாபம் உயர்ந்த போதிலும் அது சந்தை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் இந்நிறுவனப் பங்கு விலை வெள்ளிக்கிழமை 9 சதவீதம் சரிந்து ரூ. 1,505.55-க்கு மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமானது. அமெரிக்கா மூலமான வருமானம் 11.1 சதவீதமும் ஐரோப்பிய யூனியன் மூலமான வருமானம் 20.8 சதவீதமும் உயர்ந்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் இந்நிறுவனம் 11,631 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதன் மூலம் பணியாளர்களின் எண்ணிக்கை 95,522 ஆக உயர்ந்துள்ளது. நிறுவன பணியாளர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணி புரிவோ ருக்கு 7 சதவீத உயர்வு அளிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இடைக்கால ஈவுத் தொகை (டிவிடெண்ட்) ஒரு பங்குக்கு ரூ. 6 அளிக்கப்படும் என அறிவித் துள்ளது.
என்ஐஐடி லாபம் சரிவு
தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமான என்ஐஐடி-யின் காலாண்டு லாபம் 14 சதவீதம் சரிந்துள்ளது. செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 10.1 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 12 கோடியாக இருந்தது.
என்ஐஐடி-யின் ஒட்டுமொத்த வருமானம் கணிசமாக சரிந்து ரூ. 260.4 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவன வருமானம் ரூ. 262.4 கோடியாகும்.