

இந்தியாவை சேர்ந்த 7 முன்னணி ஐடி நிறுவனங்களின் ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கான அனுமதி 2016-ம் ஆண்டில் 37 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்ற உயர் திறன் பணியாளர்களை ஹெச்1பி விசா மூலம் இந்திய நிறுவனங்கள் அனுப்பி வருகின்றன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016-ம் ஆண்டில் 37 சதவீத விசா விண் ணப்பங்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை.
இந்த விசாவை நிறு வனங்கள் தவறாக பயன்படுத்து வதாக அமெரிக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாக இது குறைந்துள்ளது என சமீபத்திய அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் ஏழு ஐடி நிறுவனங்களுக்கு 9,356 விண்ணப்பங்களுக்கு 2016-ம் ஆண்டில் அனுமதி கிடைத்துள்ளது. இது அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சதவீதத்தில் 0.006 சதவீதம் ஆகும். தேசிய அளவில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உள்ளன. ஒப்பீட்டளவில் இந்த 10,000 பணியாளர்கள் என்பது மிகக் குறைந்த அளவு. இதனால் வேலை இழப்பு என்பது மிகைப் படுத்தப்பட்டதாக சித்தரிக்கப்படுகிறது என்றும் அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பொறுப்புக்கு வந்த பிறகு, ஏப்ரல் மாதத்தில் விசாவுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. டிரம்ப் அரசு அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதால் நிறுவனங்களின் திட்டங்கள், அமெரிக்க பணியாளர்களின் சம்பளங்களிலும் மாற்றங்கள் உருவாகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்க விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர் துறை, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த அறிக்கைபடி டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்1பி விசாவுக்கான விண்ணப்ப அனுமதி 56 சதவீதம் சரிந்துள்ளது. 2015ம் ஆண்டில் 4,674 விண்ணப்பங்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் 2016ம் ஆண்டில் 2,040 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் விண்ணப்ப அனுமதி 52 சதவீதம் சரிந்துள்ளது.
2015ம் ஆண்டில் 3,079 விண்ணப்பங்களுக்கும் 2016ம் ஆண்டில் 1,474 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு 16 சதவீதம் குறைந்துள்ளது. 2015ம் ஆண்டில் 2,830 விண்ணப்பங்களுக்கு கிடைத்த அனுமதி 2016 ம் ஆண்டில் 2,376 விண்ணப்பங்களுக்கு கிடைத்துள்ளது என அரசு அறிக்கையை மேற்கோள்காட்டி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.