Published : 09 Feb 2014 01:25 PM
Last Updated : 09 Feb 2014 01:25 PM

வணிக நூலகம்: மனதில் உறுதி வேண்டும்

விளையாட்டு உளவியல் எனும் புதிய துறையை எனக்கு தொட்டுக் காண்பித்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாண்டி கார்டன். 2003-ல் எம்.ஆர்.எஃப். பேஸ் ஃபௌண்டேஷனுக்காக சென்னையில் கிரிக்கெட் ஆசான்களுக்கு கோச்சிங் பற்றி 3 நாட்கள் பயிலரங்கம் நடத்தினார்.

வேகப் பந்தாளர்களின் உளவியல் ஆலோசனைக்காக என்னை பணித்த அந்த நிறுவனம் என்னையும் பயிலரங் கத்தில் பங்கேற்கச் செய்தது. உளவியல் ஆலோசனை என்றால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்னைப் போன்றோர்க்கு கார்டனின் “குறைந்த கால ஆலோசனை உத்திகள்” வியப்பாக இருந்தன.

“பிஸினஸ் போல அல்ல விளையாட்டு, இன்று தவறு செய்தால் நாளை திருத்திக் கொள்ளலாம் என்பதற்கு. நொடிப் பொழுதில் செய்யும் தவறு விளையாட்டின் போக்கை மட்டும் அல்ல அந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கையையே பாதிக்கக் கூடும்.

இங்கு எல்லாமே குறைந்த அவகாசத்தில் நடக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவதோ, ஊக்கத்தை அதிகப்படுத்துவதோ எதுவாக இருந்தாலும்!” என்றார் கார்டன்.

என் மருத்துவ உளவியல் பிண்ணனி விளையாட்டு ஆலோசனைக்கும் பயிற்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறி தன்னுடன் இலங்கை வருமாறு அழைத்தார். சில காரணங்களுக்காக செல்லவில்லை. ஆனால் கார்டன் கற்றுத் தந்த உத்திகள் எனக்கு Performance Counselingல் பெரிதும் பயன்பட்டன.

விளையாட்டு வீரர்களுக்கான உளவியல் என்று பார்ப்பதை விட இது வேலையில் உள்ள அனைவருக்கும் தங்கள் Performance அதிகப்படுத்த பயன்படும் உளவியல் என நிச்சயம் சொல்லலாம்.

இதை உறுதிப்படுத்துகிறது The Power of Full Engagement புத்தகம். ஜிம் லோஹர் மற்றும் டோனி ஷ்வார்ட்ஸ் எழுதிய இந்த புத்தகம் வெளியான ஆண்டு 2003. எனக்கு படிக்க கிடைத்தது 2008-ல். இந்தியாவில் பெரும் அளவு இது பிரபலமாகாதது ஏன் என்று புரியவில்லை.

இந்த எளிய புத்தகத்தை விளையாட்டு வீரர்கள், அவர்களின் ஆசான்கள், மனித வள பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் என எல்லாருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

புத்தகத்தின் முதல் கருத்தே நம்மை கொக்கி போட்டு இழுக்கிறது. நேரத்தை நிர்வாகம் செய்ய முடியாது. டைம் மேனேஜ்மெண்ட் என்பது சாத்தியமில்லை என்கிறார். உங்கள் சக்தியை நிர்வாகம் செய்யுங்கள். அது தான் செயல்திறனை உயர்த்தும் என்கிறார். நம் சக்தியை 4 நிலைகளில் உயர்த்தலாம் என்றும் சொல்லித்தருகிறார்.

பிஸி, பிஸி, என்று அலையும் கார்ப்ரேட் ஆசாமிகளின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார். சரியான தூக்கம், உணவு, ஓய்வு எதுவுமின்றி அதிக நேர வேலை, தொடர் பிரயாணம் எனபதே வாழ்க்கை ஆகிவிட்டது. காபி, சிகரெட், மது போன்றவை தான் ரிலாக்சேஷன். வேலையில் தொடந்து இடையூறுகள், இதனால் தொடர் சிடுசிடுப்பு, வீட்டு உறவுகளுக்கு நேரமில்லை, எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாத ஓட்டம்....என வரிசையாக விளக்குகிறார்.

நம் வேலை பற்றிய எதிர்பார்ப்புகளும் அதை செய்யாமல் விட்டால் வரும் பாதிப்புகளும் வருடா வருடம் ஏறிக்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப நம்மில் யாரும், ஒரு விளையாட்டு வீரரைப் போல நம்மை தயார்படுத்திக் கொள்வதில்லை. அதனால் நெருக்கடிகளில் நொறுங்கிப் போய்விடுகிறோம்.

நான்கு நிலைகளில் நாம் ஒருங்கிணையும் போது நம் சக்தியும் செயல்பாடும் கூடுகிறது. அந்த 4 நிலைகள்: உடல், உணர்வு, சிந்தனை மற்றும் ஆன்மிகம் சார்ந்தது.

இந்த நான்கு நிலைகளிலிருந்தும் வெளிப்படும் சக்தியை முறைப்படி உருவாக்கியும் செலவளித்தும் சேமித்தும் வைக்க பயிற்சி உதவுகிறது.

| தூக்கம், உடற்பயிற்சி, உணவு மற்றும் நீர் அருந்துதல் உடல் சக்தியைப் பேணும்.

l பொறுமை, பிறரை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம், நம்பிக்கை, மகிழ்ச்சி இவை உணர்வு சக்தியைப் பேணும்.

l காட்சிப்படுத்துதல், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சுய விவாதம், திறந்த மனோபாவம் இவை சிந்தனை சக்தியைப் பேணும்.

l நேர்மை, விசுவாசம், துணிவு, விடா முயற்சி இவை ஆன்மிக சக்தியைப் பேணும்.

இந்த ஒவ்வொன்றும் எப்படி ஒவ்வொரு திறனை வளர்க்கிறது, எப்படி அது நம் ஒட்டுமொத்த சக்தியையும் மேம்படுத்தி பெரிய செயல்பாடுகளுக்கு நம்மை தயார் நிலையில் வைத்திருக்கிறது என்று விரிவாக விளக்குகிறார்கள்.

இருதயத்தை பாதுகாப்பது எவ்வளவு உடலுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தன்னம்பிக்கை உணர்வுகளுக்கு. சிந்தனைக்கு கூர்மை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பரோபகாரம் ஆன்மிகத்திற்கு. இதில் அடிப்படை உடல். அதன் அடித்த தளம் உணர்வு. அதற்கு அடுத்த தளம் சிந்தனை. எல்லாவற்றிக்கும் மேல் தளம் ஆன்மிகம். இது தான் கட்டமைப்பு.

ஒரு விளையாட்டு பயிற்சியாளரின் கடமைகள் வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல. என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்று பராமரிப்பதைப் போல எவ்வளவு பொறுமை, எவ்வளவு தன்னம்பிக்கை, எவ்வளவு சமயோசித புத்தி, எவ்வளவு தெளிவு, எவ்வளவு நேர்மை என்றும் பராமரிக்க வேண்டும். இந்த இடங்களில் தான் விளையாட்டு உளவியல் ஆலோசனை தேவைப்படுகிறது.

ஒரு நாளில் நிறைய வேலை செய்ய ஓடுவதை விட நாம் செய்ய வேண்டிய வேலையை திறம்பட, மகிழ்ச்சியாக, உடல் சோர்வின்றி செய்கிறோமா என்பதுதான் கேள்வி. இதன் பதில் தான் உங்கள் வேலை வெற்றிக்கும் வாழ்க்கை ஆரோக்கியத்திற்குமான விடை.

இதை Full Engagement Training Systems என்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் இதை விளையாட்டு வீரர்கள் முதல் கார்பரேட் மேலாளர்கள் வரை பயிற்சி அளித்து வருகிறார்கள். இதை முறையாக ஆய்வு நடத்தி, பயிற்சி அளித்து, முடிவுகளை வெளியிடுகிறார்கள்.

முதலில் படித்த போதே நம் யோகாவின் நகல் தானே இது எனப்பட்டது. அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என 5 கோஷங்களில் அலோபதி போல மூச்சை உடலோடு சேர்த்திருக்கிறார்கள். நம்ம சங்கதியை காப்பி அடித்து விட்டார்களே என்பதை காட்டிலும் இதை வைத்து 20 வருடங்கள் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து எந்த பாசாங்கும் இல்லாமல் வெளியிட்டிருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தில் இந்த பயிற்சி நடத்த ஆய்வு செய்யச் சொன்னார்கள். செய்ததில் மேல் தட்டு மேலாளர்கள் மிகுந்த கவனச்சிதைவுடன் வேலை செய்வதாகவும், பிறர் கூறுவதை காதில் கேட்கும் பொறுமை குறைந்து விட்டதாகவும், இதனால் முடிவு எடுப்பதில் தாமதம் இருப்பதாகவும் தெரிய வந்தது.

பூனைக்கு மணி கட்டும் வேலை எனக்கு. நிர்வாக இயக்குநர் முன் பி.பி.டி யுடன் முடிவுகள் அறிவிக்க வேண்டும். மிக முக்கிய பணிகளில் கூட சிந்தனை சார்ந்த கவனச் சிதறல்கள் உள்ளது என்று புள்ளி விவரங்களுடன் என் கூற்றை எடுத்துச் சொன்னேன். எல்லாரும் பயந்தார்கள்- எம். டி . எப்படி எடுத்துக் கொள்வார் என்று!

எல்லாரையும் நோட்டம் விட்டபின் எம்.டி. பக்கம் திரும்பினேன். அவர் எப்பொழுதும் தவழும் புன்னகையுடன் செல்போனில் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x