

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ. 1.07 லட்சம் வரை குறைத்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் கடந்த 17-ம் தேதி தாக்கல் செய்த இடைக் கால பட்ஜெட்டில் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான உற்பத்தி வரியை 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்தார். இதன் பலனாக பல நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலை யைக் குறைத்துள்ளன.
அந்த வரிசையில் ஃபோர்டு நிறுவனமும் விலையைக் குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்புகளான ஃபோர்டு பிகோ, ஃபோர்டு கிளாசிக், ஃபோர்டு இகோ ஸ்போர்ட், ஃபோர்டு பியஸ்டா ஆகிய கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.
ஃபோர்டு பிகோ கார் விலை ரூ. 23,999-ம், ஃபோர்டு கிளாசிக் விலை ரூ. 24,056-ம் குறைக்கப் பட்டுள்ளது. ஃபோர்டு இகோ ஸ்போர்ட்ஸ் விலை ரூ. 25,947 குறைக்கப் பட்டுள்ளது. ஃபோர்டு பியஸ்டா, ஃபோர்டு என்டவர் விலை முறையே ரூ. 32,399-ம் ரூ. 1,06,753-ம் குறைக்கப்பட்டுள்ளன.