

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் துறைமுகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் கோடியாகும்.
பிரதமர் தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் ஏனயம் அருகே குளச்சல் துறைமுகம் கட்ட கொள்கையள வில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் மேலும் கூறியது:
எஸ்பிவி எனப்படும் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் குளச்சல் துறைமுகம் கட்டப்படும். இது கட்டப் பட்டால் சரக்குப் பெட்டகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் நுழை வாயிலாக இந்தத் துறைமுகம் திகழும். பொதுவாக சரக்குப் பெட்டகங்கள் பரிமாற்றம் இந்தியாவுக்கு வெளியேதான் நிகழ்கிறது. இந்தத் துறைமுகம் உருவானால் அந்தக் குறை நீங்கும். இதனால் சரக்குப் போக்குவரத்து பெட்டக போக்குவரத்தில் மிகப் பெரிய வளர்ச்சி எட்டப்படும்.
சர்வதேச அளவில் சரக்குப் போக்குவரத்தில் வடக்கு கிழக்கு இடையிலான போக்குவரத்து மார்க்கமாக இது திகழும் என்று துறைமுகத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடியாகும். இது மூன்று கட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. முதல் கட்டப் பணிக்கான திட்ட மதிப்பு ரூ.6,575 ஆகும்.
முதல் கட்டப் பணியில் தனியார் துறையினர் ரூ.2,500 கோடியை முதலீடு செய்ய உள்ளனர். டெர்மினல் பெர்த் மற்றும் யார்டு மற்றும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் இயந்திரங்கள் வாங்க இத்தொகை பயன்படுத்தப்படும்.
குளச்சல் துறைமுகம் உருவாக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். கடல் பகுதியில் 500 ஏக்கர் அளவுக்கு துறைமுகம் உருவாக்கப்படஉள்ளது. இது இயற்கையான துறைமுகமாகும். இங்கு ஏற்கெனவே 20 மீட்டர் ஆழத்துக்கு கடல் பரப்பு உள்ளது. இது சர்வதேச கப்பல் போக்கு வரத்து மார்க்கத்திலிருந்து 4 நாட்டி கல் மைல் தூரத்தில் அமைந் துள்ளது.
முதல் கட்ட பணிகள் நிறைவேறினால் இந்த துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும். இது படிப்படியாக அதிகரித்து எதிர்காலத்தில் 80 லட்சம் டன் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மிகவும் புராதனமான துறைமுகமாகும். கப்பலில் உலகை சுற்றி வந்த வாஸ்கோடகாமா இந்த துறைமுகத்தை கொளச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இது முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இப்போது அமையவுள்ள துறைமுகம் நாகர்கோவிலிலிருந்து 19 கி.மீ. தூரத்தில் இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அப்பாவி மீனவர்களை திமுக, காங்கிரஸ் கட்சியினர் தூண்டி விடுவதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
எந்த ஒரு நல்ல திட்டத்தையும் எதிர்க்கும் போக்கை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருந்தால், தனது பதவியை ராஜினாமா செய்து, தனது கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்தப் போவதாக மக்களவையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.