

தமிழ்நாட்டை சேர்ந்த கிராம விடியல் எனும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை ஐடிஎப்சி வங்கி வாங்கியுள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கவில்லை.
கிராம விடியல் நிறுவனத்துக்கு 12 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் ரூ.1,500 கோடிக்கு சொத்துகளை கையாளுகிறது. இந்த இணைப்புக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, மஹாராஷ்ட்ரம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் இந்த மைக்ரோபைனான்ஸ் செயல்படுகிறது.
30 வருடங்களாக திருச்சியில் செயல்படும் மைக்ரோபைனான்ஸ் நிறுவனம் இது. இங்கு 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளன. ஒரு வங்கி மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்தை வாங்குவது நாட்டிலேயே இதுமுதல் முறை என ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் லால் தெரிவித்திருக்கிறார். இந்த இணைப்புக்கு பிறகு ஐடிஎப்சி வங்கியின் துணை நிறுவனமாக கிராம விடியல் செயல்படும்.
ஐடிஎப்சி வங்கி கடந்த வருடம் அக்டோபர் மாதம் வங்கி செயல்பாட்டினை தொடங்கியது. இந்த இணைப்பு காரணமாக ஐடிஎப்சி பங்கு நேற்றைய வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 12 சதவீத அளவுக்கு உயர்ந்த இந்த பங்கு வர்த்தகத்தின் முடிவில் 8.22 சதவீதம் உயர்ந்து 52 ரூபாயில் முடிவடைந்தது.