

சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய ரகக் காரை டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்எல் 55 ஏஎம்ஜி என்ற பெயரிலான இந்தக் காரின் விலை ரூ. 1.26 கோடியாகும்.
இருவர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய இந்த வகைக் கார் 5.5 லிட்டர் வி8 பெட்ரோல் மாடல் காராகும். இந்த ஆண்டு இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ள புதிய ரகக் கார் இதுவாகும். சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள பிற பென்ஸ் ரகக் கார்களையும் இந்தியச் சந்தையில் படிப்படியாக அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அறிமுக விழாவில் நிறுவனத்தின் செயல் அதிகாரி எபெர்ஹார்ட் கெர்ன் தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்நிறுவனம் பென்ஸ் ஏ கிளாஸ், பி கிளாஸ் டீசல் மற்றும் ஜி கிளாஸ் ரகக் கார்களை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஸ்திரமான வளர்ச்சி மற்றும் சீரான லாப வர்த்தகத்தை எதிர்நோக்கி புதிய ரகக் கார்களை அறிமுகம் செய்து வருவதாக அவர் கூறினார்.