

நான் வாங்கிய முதல் பரிசு ஒன்பதாவது படிக்கும் பொழுது. காந்தி பற்றி தமிழில் கட்டுரை எழுதியதற்கான பரிசு அது. சத்திய சோதனை புத்தகம். பல காரணங்களுக்காக அது எனக்கு விசேஷ நினைவு. முதன் முறையாகப் பரிசு பெற்றது. அதுவும் சொந்தமாக எழுதியதற்கு. அதுவும் காந்தியின் சுய சரிதை. என் சுய அடையாளத்தை புனையத்துவங்கிய பொழுது அது என்று இன்று தோன்றுகிறது.
காந்தி எல்லா காலங்களிலும் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறார். காலப்போக்கில் காரணங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றன.
முதன் முதலில் படித்தபோதே என்னை வசீகரித்தது அவர் அரிச்சந்திரன் நாடகம் பார்த்த சம்பவம்தான். எக்காரணம் கொண்டும் பொய் பேசாதிருத்தல் என்பது ஒரு நாயகத் தன்மையாக அவரை வெகுவாக பாதித்திருக்கின்றது. பிற்காலத்தில் சத்தியம் பற்றிய தன் மொத்த கருத்தாக்கத்திற்கும் காரணம் அந்த பாதிப்புதான். அவர் அரிச்சந்திரனாக மாற முயன்ற போராட்டம் தான் அவர் வாழ்க்கை. சத்திய சோதனை.
பின்னாட்களில் சிக்மண்ட் ஃப்ராய்ட்டை முறையாக படிக்கையில் புரிந்தது- நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நாம் ஏற்றுக்கொண்ட நாயகர்கள் என்று. நம் ஆழ்மனதில் தந்தையின் (அல்லது தந்தை உருவத்தின்) தாக்கம் தான் நம் நிறுவனத்திற்கும் நமக்கான உறவை உறுதி செய்கிறது. தந்தை மீது கொள்ளும் உறவையும் உணர்வையும் பின்னர் நாம் இருக்கும் நிறுவனத்தின் மீதும் காட்டுகிறோம்.
இதை சிறப்பாக காட்டியவை எழுபதுகளில் angry young man ஆக திகழ்ந்த அமிதாப் பச்சனின் திரைப்படங்கள். அந்த கால கட்டங்களில் பல படங்களில் அவர் ஒரு நிறுவனத்திற்கோ, சமூகத்திற்கோ எதிர்த்து செயல்படும் ஒரு கலகக்காராகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.
அது சலீம்- ஜாவத்தின் கை வண்ணம்! அந்த படங்களிலெல்லாம் அவருக்கு தந்தை இருக்க மாட்டார். அல்லது தாய்க்கு துரோகம் இழைத்திருப்பார். அல்லது சிக்கலான உறவு நிலை கொண்டிருப்பார்.
தந்தை மீது இளம் பிராயத்தில் கொண்டுள்ள உணர்வுகள் பின் நாட்களில் எல்லா அதிகார மையங்கள் மீதும் காட்டுகிறோம் என்பதே இங்கு உளவியல் செய்தி.
பொதுவாக மன நல மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் உலகம் எங்கும் அதிகமாக தாடி வைத்திருப்பதற்கு காரணம் உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் மேலுள்ள கதாநாயக மோகத்தில் தான்.
ஒவ்வொரு உள்மன நிழல் நாயகனும் எப்படி சரித்திர நாயகர்களின் வாழ்க்கையை பாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லிக் கொண்டே போகிறது. ஜவகர்லால் நேருவிற்கு ராபின்சன் குருசோ, அவர் மகள் இந்திரா காந்திக்கு ஜோன் ஆஃப் ஆர்க் இருவரும் ஆதர்ஷ நாயகர்கள். நாயகர்களின் ஆளுமையும் வாழ்க்கையும் எப்படி சம்பந்தப்பட்ட தலைவர்களை பாதித்துள்ளது என்பதை நீங்களே ஆய்வு செய்யுங்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாயகன் சுபாஷ் சந்திர போஸ். அவர் வாழ்வும் மரணம் குறித்த சர்ச்சைகளும் முழுக்க முழுக்க போஸ் போலவே ஏற்பட்டுள்ளது யதேச்சையான நிகழ்வுகள் அல்ல!
நீங்கள் யார், நீங்கள் என்னவாக ஆக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் உள் மனதில் குடி கொண்டுள்ள நாயகர்கள் தீர்மானிக்கிறார்கள்!
உங்கள் இளம்பிராய நாயகர்கள் யார்? அவர்களிடம் நீங்கள் கண்ட/காணும் உங்கள் குணங்கள் என்ன? உங்கள் மேல் அவர்கள் விட்டுச்செல்லும் குணங்கள் என்ன? இந்த கேள்விகளை உங்கள் பிள்ளைகளிடம் விவாதியுங்கள். அவர்களின் இன்றைய கதாநாயகர்கள் அவர்களின் நாளைய வாழ்கையை நிர்ணயிக்கிறார்கள்.
இந்த கூற்றுக்கு எல்லாம் ஒரு மறு கூற்று சமூகவியலில் உண்டு. தனக்கு ஏற்ற ஒரு தலைவனை ஒவ்வொரு கூட்டமும் உருவாக்கிக் கொள்கிறது என்கிறார்கள். ஒரு தலைவரின் லட்சணத்தைப் பார்ப்பதை விட அவரை தேர்ந்தெடுத்த மக்களின் லட்சணத்தை பார்ப்பது விவேகம். இது இன்றைய அரசியலுக்கு மிகவும் பொருந்தும்.
ஆனால் நிறுவனங்களில் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அல்லது உள்ளே வளர்க்கப்படுகிறார்கள். இரண்டு சூழ்நிலைகளிலும் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் இந்த மக்களில் சிலர் தலைவர்களாகும் போது நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள தலைவர்களின் தாக்கம் நிச்சயம் இவர்களிடம் தெரியும்.
தலைமைப் பண்புகள் பற்றிய என் பயிற்சி வகுப்பில் ஒருவர் கூறினார்: “அவர் கீழே 20 வருஷம் வேலை பார்த்தேன் என்பதை விட 20 வருடம் சித்திரவதை அனுபவித்தேன். அப்படி ஒரு நாளும் இருக்கக்கூடாது என்பது தான் எல்லா காலத்திலும் என் எண்ணம். ஆனால் கோபப்படும் நேரத்தில் அவர் என்னைத் திட்டிய கெட்ட வார்த்தைகள் தான் என்னையும் அறியாமல் வருகிறது. என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.”
உள பகுப்பாய்வையும் ஃப்ராய்டையும் விட்டு வெகு தூரம் கடந்து வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அவரின் தத்துவ வீச்சை நினைவு படுத்துகின்றன.
உங்கள் முன் மாதிரி யார்? அவர் அம்பானியை வழிபடுவரா? அவர் நாரயணமூர்த்தியை வழிபடுபவரா? மல்லையாவை வழிபடுபவரா? இந்த தேர்விற்கேற்ப உங்கள் நிர்வாகப் பண்புகள் மாறும்.
இன்று நல்ல தலைவர்களை நிறுவனங்களும் எதிர் நோக்கியுள்ளன. ஆனால் நல்ல தலைவர்கள் தானாக தோன்றுவதை விட வளர்க்கப்பட வேண்டியது அவசியம்.
இன்று நிறுவன ‘மேல் தட்டில்’ உள்ள மனித வளப் பிரச்னை போதிய தலைவர்கள் இல்லாமை தான். தொழிற்திறன்களில் தேர்ச்சி பெற்ற ஒருவர் நல்ல தலைவராக திகழ்வார் என்பது மடமை.
இங்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்தால் தலைமை பொறுப்பு தானாக வருகிறது. மிக மோசமான மக்கள் தொடர்பு திறன்கள் கொண்ட பலரை நாம் பெரிய பதவிகளில் பார்க்கிறோம். இவர்கள் நிறுவனத்தை மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் தலைமை பண்புகளையும் பாதிக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய மேலாளர்கள் உலகளாவிய மேலாளர் ஆக தகுதி படைத்தவர்கள் என்கிறது ஆய்வுகள். கலாசார பன்முகத்தன்மை இதற்கு மிக முக்கிய காரணம். பன்னாட்டு நிறுவனங்களின் வெளி நாட்டு தலைமை பொறுப்புகள் இந்தியர்களைத் தேடி வருவதற்கு இது தான் காரணம்.
ஆனால் நம்மில் பல இந்திய நிறுவனங்கள், வருங்கால தலைமை பொறுப்புகளுக்கு மத்திய நிலை மேலாளர்களை முறையாக பயிற்சி அளித்து அவர்களை முழுமையான துறை தலைவர்கள் ஆக்க தவறுகிறது. குறிப்பாக குடும்பங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு இந்த அவசியம் அதிகம். ஆனால் பாதுகாப்பின்மை உணர்வினால் இது நடைபெறுவதே இல்லை. இதனால் நல்ல மேலாளர்களை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது நடந்தாலும் மேலே பார்த்து திட்டுவது இங்கு வழக்கம். “தல சரியில்ல..வால் என்ன பண்ண முடியும்?” என்பதை அடிக்கடி கேட்கிறோம். “The Bottlenecks are always on the top!” என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. அலுவலக நகைச்சுவை என்றாலே பாஸ் பற்றித்தான்.
சினிமாவில் கூட படம் ஜெயித்தால் கேரக்டர் சூப்பர் என்பார்கள்; தோற்றால் டைரக்டர் வேஸ்ட் என்பார்கள்.
தலைமை பொறுப்பும் நாயக அந்தஸ்தும் அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்றால் அது மிகையில்லை.
இதை எழுதும் போது எட்டிப்பார்த்த என் நண்பர், “என்ன தீபாவளிக்காக நம்ம “தல” பற்றிய கட்டுரையா?” என்று அப்பாவியாய் கேட்டார். இங்கு கதாநாயக வழிபாடு பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்று தோன்றுகிறது!
டாக்டர். ஆர். கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com