

‘புதிய இந்தியாவுக்கான புதிய ஐடியாக்கள்’ என்ற கருத்தரங்கினை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘தி இந்து’ நடத்தியது. இதில் நிதி அமைச்சருக்கான முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் விர்மானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோ சகர் அஜித் ரானடே, கார்ப்பரேட் ஆலோசகர் எஸ்.குருமூர்த்தி, என்.ஐ.பி.எஃப்.பி. (National Institute of Public Finance and Policy) இயக்குநர் ரதின் ராய் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கை தி இந்துவின் எடிட்டர் இன் சீஃப் என்.ரவி ஒருங்கிணைத்தார்.
நாட்டின் பொருளாதாரத்தின் எந்த இடத்தை எடுத்துக்கொண்டாலும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதுகுறித்து நமது பொருளாதார வல்லுநர்கள் வழிகாட்டுவார்கள் என்று ஆரம்பித்தார் என்.ரவி. டாக்டர் விர்மானி பேசும்போது, இந்தியாவின் மந்தமான வளர்ச்சிக்கு உலகப் பொருளாதார மந்த நிலையை ஒட்டுமொத்தமான காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
அரசு கொள்கை முடிவுகளை சரியாக எடுக்காததால் வந்த விளைவு இது. அடுத்து வரும் அரசு, தெரிந்த பிரச்சினைகளுக்கு தெரிந்த முடிவுகளையே எடுக்கும் பட்சத்தில் 8 சதவீத வளர்ச்சியை இந்தியாவால் அடைய முடியாது.
தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது, சேமிப்பை அதிகரிப்பது போன்றவைதான் நீண்டகால வளர்ச்சிக்குத் தேவை. மேலும் குறுகியகால டாலர் வரத்தை குறைக்கவேண்டும் மற்றும் நிதி மற்றும் கடன் கொள்கைகள் கடின மாக்கப்பட வேண்டும் என்றார் விர்மானி.
டாக்டர் ரானடே பொருளாதாரத்தின் சாதகமான விஷயங்களைப் பற்றி பேசினார். இந்தியா 1 டிரில்லி யன் டாலர் பொருளாதாரமாக இருந்தபோது சில ஆண்டுகளாக 9 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போது இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கும் பட்சத்தில், 4.5 சதவீத வளர்ச்சி தேவைப்படும். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி கொஞ்சம் அதிகமே என்றார்.
மேற்கு நாடுகளின் கொள்கைகள் இந்தியாவின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என்று நம்புவதுதான் பிரச்சினை என்றார் ஆடிட்டர் குருமூர்த்தி. நிதி அமைச்சர் ப.சிதம்பரமே நிறைய தங்கத்தினை வைத்திருக்கிறார், தங்கத்தை நம்பும் சமூகத்திலிருந்து வந்திருக்கும் அவர் செய்யும் பெரிய மோசடி இது என்றார். நிதிப்பற்றாக்குறை பிரச்சினை மத்திய அரசுக்கு இருக்கிறதே தவிர மாநில அரசுகளுக்கு இல்லை என்று ரதின் ராய் தெரிவித்தார்.