ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம்: எஸ்பிஐ பரிசீலனை

ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம்: எஸ்பிஐ பரிசீலனை
Updated on
2 min read

தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தை (ஏடிஎம்) பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

ஏடிஎம்-களை நிர்வகிப்பதால் வங்கிக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் நஷ்டத்தைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு அதாவது ஒருமுறை பயன்படுத்தினால் இவ்வளவு தொகை என்ற அளவில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

வணிக ரீதியில் ஏடிஎம்கள் லாபகரமானதாக இயங்கும் வகையிலான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். எந்த ஒரு சேவையும் வங்கிக்கு வருவாய் ஈட்டக் கூடியதாக, லாபகரமானதாக இருக்க வேண்டும். வங்கி மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையும்போது, வாடிக்கையாளர்கள் மூலம் வங்கியும் ஆதாயமடைய வேண்டும். அப்போதுதான் பரஸ்பரம் வளர்ச்சியை எட்ட முடியும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து மாதா மாதம் ஏடிஎம் நிர்வாகத்தால் நஷ்டம் ஏற்படுவதை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலேயே மிக அதிக எண்ணிக்கையில் (32,777) ஏடிஎம்களை எஸ்பிஐ வங்கி நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில குறிப்பிட்ட மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்களில் ஏடிஎம் நிர்வாகம் லாபகரமானதாக அமையவில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், அத்தகைய மாநிலங்களின் பெயர்களைப் பட்டியலிட மறுத்துவிட்டார்.

இனியும் ஏடிஎம் நிர்வாகத்துக்குத் தேவையான தொகையை மானியமாக எஸ்பிஐ ஏற்க இயலாது என்று சுட்டிக் காட்டினார். ஏடிஎம் மூலமான நஷ்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் ஏடிஎம்களை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனாலும் அதை எந்த வகையில் ஸ்திரமான வருமானம் ஈட்டும் ஒரு பகுதியாக மாற்றுவது என்பது புரியவில்லை.

பெங்களூரில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ஒரு பெண் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏடிஎம்களில் போதிய பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தது. பாதுகாப்புக்கு ஆள்களை நியமிப்பதற்கு கட்டணம் வசூலித்தாக வேண்டும். வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணம் வசூலிப்பதை எஸ்பிஐ ஆதரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் உபயோகப்படுத்த வேண்டும், இதனால் பயனடைய வேண்டும் என்பதற்காக ஏடிஎம்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்வதில் எவ்வித பயனும் இல்லை. அது வர்த்தக ரீதியில் லாபகரமானதாக இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

தற்போது வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு 5 முறை பிற வங்கியின் ஏடிஎம்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்விதம் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அந்த குறிப்பிட்ட வங்கிக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 15 கட்டணமாக தரவேண்டியுள்ளது. வாடிக்கையாளருக்கு இலவசமாக இந்தச் சேவை அளிக்கப்பட்டாலும், வங்கி இதற்கான செலவை ஏற்க வேண்டியுள்ளது. சேமிப்புக் கணக்கில் மிகக் குறைந்த தொகையைக் கொண்டுள்ள வாடிக்கையாளர் கூட பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்துகின்றனர்.

இதற்காக வரியையும் சேர்த்து ஒரு சேவைக்கு ரூ. 17 செலவு செய்ய வேண்டியுள்ளது என்று பட்டாச்சார்யா சுட்டிக் காட்டினார். இந்த சேமிப்புக் கணக்கால் வங்கிக்கு ஒரு பைசா கூட வருவாய் இல்லாத நிலையில் இதை எப்படி ஈடு கட்ட முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

எஸ்பிஐ ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்த்து பிற ஏடிஎம்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இதனால் வங்கிக்குத்தான் இழப்பு என்று அவர் கூறினார். ஏடிஎம் பரிவர்த்தனை எண்ணிக்கையைக் குறைக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்குக் கோரிக்கை வைத்துள்ளது. எந்த வங்கி ஏடிஎம்களை வைத்துள்ளனரோ அந்த வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 பண பரிவர்த்தனை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. ஏடிஎம்களின் பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 400 கோடி செலவிடப்படுகிறது.

வங்கி ஏடிஎம்களில் வாடிக்கை யாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை அனுமதிப்பது முட்டாள்தனமானது என்று சமீபத்தில் ஆர்பிஐ துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதுபோல பணம் வசூலிப்பது வேறெங்கும் நடைபெறவில்லை என்றும், வங்கிகள் தங்களது செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in