Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

மாற்றம் மட்டுமே வெற்றியை தக்கவைக்கும்

அன்டார்டிகா. பெங்குவின்களின் குடியிருப்பு. எல்லா பெங்குவின்களும் மீன் பிடித்துக் கொண்டு தினசரி வேலைகளில் ஈடுபட்டிருக்க, பிரெட் எனும் ஒரு பெங்குவின் மட்டும் சமுத்திரத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் கவலையின் ரேகைகள்!

பனிப்பாறைகளில் பிளவுகள் தெரிகிறது. விரிசல்களில் நீர் புகுந்து கொள்கிறது. இரண்டு மாதத்தில் கடுங்குளிர் காலம். நீர் பனிக்கட்டியாய் உறைந்து விரிவுற்றால் பாறைகளின் விரிசல்கள் பிளக்கும்.

பெரிய பனிப்பாறைகளும் இப்படி ஒவ்வொன்றாய் உருகி உடைந்தால் நம் பெங்குவின்களின் உயிர்களும் ஜீவாதாரமும் என்னவாகும்? இது எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யாமல் நம் கூட்டம் கேளிக்கை செய்து கொண்டு திரிகின்றனவே? என பிரெட் மிகுந்த கலக்கத்தில் இருந்தது. இதை எப்படி நம் மக்களிடம் சொல்லி மாற்றத்திற்கு வழி வகுப்பது?

முதலில் கேட்கத்தயாராக இருந்த ஆலிஸ் என்ற பெங்குவினிடம் சொல்லி தலைமை வட்டத்திற்கு இச்செய்தியை எடுத்துச் செல்ல வைக்கிறது. 10 பேர் கொண்ட தலைமைக் குழுவில் இது உடனே எடுபடவில்லை. திருமதி நோ நோ (எல்லாவற்றுக்கும் இல்லை இல்லை என்று மறுத்துப் பேசுவதால் இந்த பெயராம்!) போன்றோர், இது ஒரு கற்பனை, ஒரு போதும் கடந்த காலங்களில் இப்படி நடக்கவில்லை என்று தீவிரமாக ஓரம் கட்ட, பிரெட் ஒரு செயல்முறை சவாலுக்கு அழைக்கிறது:

“ஒரு பாட்டிலில் நீர் நிரப்பி இறுக்க மூடி வைப்போம். அது சில நாட்களில் குளிரில் வெடிக்கிறதா என்று பார்ப்போம். அதை நம் பெங்குவின் கூட்டத்திற்கே காண்பிப்போம். சம்மதமா?”

தலைமை மட்டுமின்றி மொத்த கூட்டத்தையும் எப்படி ஒருமுகப்படுத்தி, ஒரு பெரும் மாற்றத்தை எப்படி ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. ஒரு நிறுவனத்தில் மாற்றம் நிகழ்த்துவது எப்படி என்பதை பெங்குவின் கதை மூலம் மனிதர்களுக்கு உணர்த்துகிறது Our Iceberg Is Melting எனும் இந்த புத்தகம்.

ஹோல்கர் ராத்கெபர் துணையுடன் ஜான் கோட்டர் எழுதிய இந்த நூல், 2006ல் வெளிவந்து பிரசித்தி பெற்றது.

ஜான் கோட்டர் ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகப் பேராசிரியர். மாற்ற நிர்வாகம் (Change Management) பற்றி இவர் எழுதிய Leading Change என்ற புத்தகம் நிறுவன மாற்றம் பற்றி வெளிவந்துள்ள புத்தகங்களில் மிகவும் முக்கியமான பதிவு. ஒரு பல்கலைகழகத்திற்காக Change Management எனும் பேப்பரை வடிவமைத்து நடத்த நிறைய படிக்க நேர்ந்தது.

அப்போது தட்டுபட்ட புதையல்தான் ஜான் கோட்டரின் லீடிங் சேஞ்ச் புத்தகம். பல நூறு நிறுவனங்களின் மாற்ற நிர்வாகத்தைப் படித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் எழுதிய நூல் அது.

எல்லா மாற்ற நிர்வாகத்திற்கும் 8 ஆதார படிக்கட்டுகள் அவசியம் என்கிறார் இவர்.

#மாற்றம் பற்றிய ஒர் அவசர உணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள்.

#மாற்றத்தை முன்னெடுத்துச்செல்லும் ஒரு குழுவை தேர்ந்தெடுங்கள்.

#மாற்றம் பற்றிய பார்வை மற்றும் வியூகத்தை உருவாக்குங்கள்.

#எல்லாரும் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#மாற்றத்தை செயல்படுத்துவோர் அனைவருக்கும் அதிகாரத்தைக் கொடுங்கள்.

#குறுகியகால சின்ன வெற்றிகளை உருவாக்குங்கள். அது மக்களின் நம்பிக்கைக்கு முக்கியம்.

#முதல் சிறு வெற்றிக்கு பின் இடைவிடாது செயல்பட்டு வெற்றிகளை குவியுங்கள்.

#மாற்றத்தை தக்கவைக்கும் புது கலாசாரத்தை உருவாக்குங்கள்.

இந்த 8 நிலைகளும் Leading Change புத்தகத்தில் கோட்பாடுகளாய் சொல்லித் தரப்பட்டது. Our Iceberg Is Melting புத்தகத்தில் வண்ணக்கதையாய் மீண்டும் அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.

பேராசிரியர் எழுதும் புத்தகம் என்றால் சாமானியருக்கு புரியாது என்பதை பொய்யாக்கும் வண்ணம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆங்கிலம் தெரிந்த அனைவரும் படிக்கும் வண்ணம், வண்ணப்படக்கதையாக வந்துள்ளது. 150-க்கு குறைவான பக்கங்கள். குழந்தைகள் புத்தகம் போல ஒவ்வொரு பக்கத்திலும் வரிகள் குறைவு. சிக்கனமான வாக்கியங்கள். ஆங்காங்கே பளீரென படங்கள். Quick read வகையைச் சேரும் இந்தப் புத்தகம் ஒரு பெரிய கருத்தை எளிமையாக சொல்கிறது.

பெங்குவின் கதைக்களம் அபாரத் தேர்வு. ஏனென்றால் நாமும் அதே களத்தில்தான் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. பூமி வெப்பமாகும் அபாயம் பெங்குவின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டாலும் அது நமக்கு நன்றாகவே பொருந்துகிறது.

பனிப்பாறைகள் இங்கு குறியீடுகள்தான். நம் நிறுவனத்தில் நமக்குத் தெரியாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளும் அதை மாற்றத் தேவைப்படும் நிர்வாக முயற்சிகளும் உத்திகளும் தான் மையக்கருத்துக்கள்.

உங்கள் பனிப்பாறைகள் எது என்று யோசியுங்கள்:

“நேற்று வரை சந்தையில் நம்பர் 1. திடீரென்று

(திடீரென்று இல்லை; நாம் அப்படி உண்ர்கிறோம்) இன்று பல போட்டியாளர்கள்!”

“நல்ல பணியாளர்கள் ஒரு சிலர் வெளியேறிய போது, பாதிப்பு பெரிதாக இல்லை. இப்போது சில முக்கிய கஸ்டமர்களை இழக்கும்போது தான் பாதிப்பு புரிகிறது!”

“நிர்வாகத்திற்கு நிறைய முற்போக்கான எண்ணங்கள் உள்ளன. ஆனால் நம் மக்களை வைத்துக் கொண்டு எப்படி செய்வது என்று தெரியவில்லை!”

“பயன்படுத்தாத வளங்கள் எங்கள் நிறுவனத்தில் மிக அதிகம். இடம், பொருள், மக்கள் திறன் இப்படி...! நெருக்கடி வரும் வரையில் எதையும் யோசிக்க மாட்டோம்!”

இப்படி நிறைய கேட்கிறோம்.

மாற்றத்தைப் பற்றி விளக்க ஒரு தவளை கதை உண்டு. சுடு நீரில் ஒரு தவளையை போட்டால் அது வெப்பத்தை உணர்ந்து உடனே வெளியே குதித்து விடும்.

ஆனால், அதே தவளையை ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து மெல்ல கொதிக்க வையுங்கள். இதமாக சூடாவதை அனுபவித்துக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் வெப்பம் தாளாது ஆபத்தை உணரும்போது அது தன் எதிர்ப்பு சக்தியை இழந்து வெந்து போயிருக்கும்.

தடாலென வரும் மாற்றங்களிலிருந்து கூட தப்பிக்கலாம், மெல்ல நிகழும் மாற்றங்கள்தான் நம்மைக் கொல்ல வரும் மாற்றங்கள்!!

gemba.karthikeyan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x