

ஜப்பானை சேர்ந்த என்டிடி டொகோமோ நிறுவனத்துக்கு டாடா சன்ஸ் ரூ.7,950 கோடி (117 கோடி டாலர்) இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே நஷ்டத்தில் இருக்கும் டாடா குழுமத்தின் டெலிகாம் நிறுவனத்துக்கு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு காரணமாக மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாடாவும், ஜப்பானை சேர்ந்த டொகோமோ நிறுவனமும் கூட்டு சேர்ந்து டாடா டொகோமோ என்னும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை 2008-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கினார்கள். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கூட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேற டொகோமோ முடிவெடுத்தது. நிறுவனத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் வெளியேற திட்ட மிட்டது.
ஒப்பந்தத்தின்படி டாடா டொகோமோ நிறுவனத்தில் உள்ள டொகோமோ பங்குகளை விற்பதற்கு டாடா ஏற்பாடு (டிசம்பர் 2014-க்குள்) செய்திருக்க வேண்டும். ஆனால் டாடா அதனை செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் டாடாவுக்கு எதிராக டொகோமோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இப்போது வெளியாகி உள்ளது.
இந்த கூட்டு நிறுவனத்தில் என்டிடி டொகோமோ நிறுவனத்தின் பங்கு 26.5 சதவீதமாகும். ரூ.13,070 கோடிக்கு இந்த பங்குகளை வாங்கியது. இப்போது இதில் 50 சதவீத தொகை இழப்பீடாக வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது.
டொகோமோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள டாடா சன்ஸ் முன்வந்தது. இதற் காக ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைக்கவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் பங்குகளை விற்க முடியாது. அதனால் சந்தை மதிப்பிலேயே டொகோமோ பங்குகளை வாங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. ஆனால் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் இருப்பதால் டொகோமோ எதிர்பார்க்கும் விலையில் பாதி விலை மட்டுமே கிடைக்கும் ( ஒரு பங்கு 23.34 ரூபாய் ) என்பதால் குறைந்த விலைக்கு விற்க டொகோமோ ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த தீர்ப்பை எதிர்த்து டாடா குழுமம் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டாடா சன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறும் போது எங்களுக்கு தீர்ப்பாயத்தின் உத்தரவு கிடைத்துள்ளது. அதனை ஆராய்ந்து வருகிறோம். இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது. சட்டத்தின் படி செயல்படுவோம் என்று குறிப்பிட்டார்.
இன்னும் சில விஷயங்கள் இதில் தெளிவில்லாமல் இருக்கிறது. என்று டொகோமோ தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறது.