Published : 03 Jun 2017 10:00 am

Updated : 03 Jun 2017 10:00 am

 

Published : 03 Jun 2017 10:00 AM
Last Updated : 03 Jun 2017 10:00 AM

தொழில் ரகசியம்: சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதா?

ஒரு வேலை, யாரிடமோ கைகட்டி சேவகம், மாசமானால் சம்பளம், அதுவும் கவர்மெண்ட் வேலையென்றால் தலையை அடகு வைத்தாவது பெறலாம்’ என்று ஏங்கியோர் இருந்த காலம் மலையேறிவிட்டது. படிக்கும் போதே ‘தொழில் தொடங்கப் போகிறேன்’ என்பவர்கள் முதல் ’எவனுக்கோ எதுக்கு கஷ்டப்பட்டு வேலை செய்யணும், நாமே பிசினஸ் தொடங்கினால் என்ன’ என்று நினைப்பவர்கள் வரையிலான உலகம் இன்று. அதோடு உலகமே அறிவு சார்ந்த பொருளாதாரமாகவும் மாறி வருகிறது.

‘ஏதோ ஐடி போன்ற துறைகளில் வேலை செய்பவர் கள் ஃபிளெக்சி டைம் கேட்கிறார்கள். செய்ய வேண்டியதை சொன்னால் போதும், அதை எங்கே எப்படி செய்வது என்று அவர்களே தீர்மானிப்பார்களாம். வீட்டிலிருந்தே கூட வேலையை தொடர்வார்களாம். மல்லாக்க படுத்துக்கொண்டு கூட மடமடவென்று முடிப் பார்களாம். ஆபீஸில், ஃபேக்டரியில் பணிபுரி பவர்கள் கூட அவர்கள் பங்கிற்கு சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். ஏதோ மாசமானால் கம்பெனியிலிருந்து அவர்களாகவே சம்பளத்தை எடுத்துக்கொண்டு மீதியை முதலாளிக்கு வைப்பதில்லை என்று வேண்டுமானால் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்!


செய்யவேண்டியதை சொல்ல ஆளிருக்கும் வரை, செய்ய வேண்டியதை தட்டிக் கேட்க ஆட்கள் இருக்கும் வரை, செய்யவேண்டிய பணிகள் பற்றிய கவலையில்லை. ஆனால் தானே செய்யவேண்டும், சுயம்புவாய் பணிபுரியவேண்டும் எனும்போது சுய ஊக்கம் (Self-motivation) முக்கியத்துவம் பெறுகிறது.

உளவியலில் சுய ஊக்கம் பற்றிய ஆராய்ச்சிகள் பிரசித்தம். சுய ஊக்கத்தின் அருமை பெருமைகளை அடுக்கும் ஆராய்ச்சிகள் அனேகம். சுய ஊக்கம் உள்ளவர்கள் பிறரை விட அதிகம் சம்பாதித்து வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் ஜெயிக்கிறார்கள். உளுந்தூர் பேட்டை துவங்கி உலகின் மூலைமுடுக்கு வரை இதே கதை தான்.

படிப்பது, எழுதுவது போல் சுய ஊக்கம் என்பது பயிற்சியெடுத்து பழகக்கூடியதே. முழு வதுமாக அறிந்து, முறையாக பயின்று முயற்சி செய்தால் சுய ஊக்கத்தை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதற்காக நாம் நினைத்த போது சுய ஊக்கம் ரைட் ராயலாக நமக்குள் வராது. சுய ஊக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கடுகளவாவது சுய ஊக்கம் நமக்குள்ளேயே இருந்தால் மட்டுமே இது சாத்தியம்!

சுற்றி இருக்கும் சூழல் நம் செயல்பாட்டை கட்டுப்படுத்தாது, மாறாக அவை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று நாம் உணர்ந்தால் நமக்குள் சுய ஊக்கம் சுயம்புவாய் பூத்து சுபிட்சமாய் வளரும். அதிகாரம் ஒரு உயிரியல் அவசியம் என்கிறார்கள் ‘கொலம்பியா பல்கலைக்கழக’ உளவியலாளர்கள். அதிகாரம் நம்மிடம் இருக்கிறது, நாம் சூழ்நிலை கைதியல்ல, கண்ட்ரோல் நம் கையில் இருக்கிறது என்று நம்பும்போது நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொண்டு கடினமாக உழைக்கிறோம் என்கிறார்கள். கட்டுப்பாடு மற்றும் கண்ட்ரோலுக்கான உள்ளுணர்வு நம் மூளை வளர்ச்சிக்கே ஆதாரமான ஒன்றாம். குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடுகிறோம். அவர்கள் தாங்களே சாப்பிட கற்றுக்கொண்ட பின் நாம் ஊட்டிவிட முயன்றாலும் தட்டிக் கழித்து நம்மை தள்ளுவது இதனால் தான். தனக்கு என்ன வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ, அதை எப்படி வேண்டுமோ அப்படி தானே சாப்பிடவேண்டும் என்ற அந்த சூழ்நிலை தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று குழந்தைகள் நினைப்பது தான் காரணமாம். குழந்தைகளாய் நாம் அடம் பிடித்ததில் கூட ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்திருக்கிறது!

சூழ்நிலை நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, எதை, என்ன, எப்படி செய்வது என்ற அதிகாரம் நம் கையில் தான் இருக்கிறது என்று நமக்கு நாமே உணரத்தான் முடிவுகள் எடுக்கிறோம். செய்யும் தேர்வு, எடுக்கும் முடிவு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அதனால் பெரிய அளவில் பயன்கள் இல்லையென்றாலும் சரி, முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது, சூழ்நிலை நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று நாம் உணர்வது ரொம்பவே முக்கியம். காரில் சென்றுகொண்டிருக்கும் போது முன்னால் ட்ராஃபிக் ஜாம் ஆகி வண்டிகள் முன்னேற முடியாமல் நிற்கும்போது வலது பக்க சந்தில் திரும்ப வழியிருக்கிறதென்றால் அந்த தெரு எங்கு போகிறது, செல்லவேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்க்குமா என்று தெரியாவிட்டாலும் சட்டென்று அந்த தெருவில் திரும்புவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?

வேறென்ன, சூழல் என் கட்டுப்பாட்டில் உள்ளது, இருப்பவற்றுக்குள் ஒன்றை தேர்வு செய்து முடிவெடுக்கும் வாய்ப்பு நம்மிடம் இருக்கிறது என்று நமக்கு நாமே உணர்த்திக் கொள்ளத்தான்!

சுய ஊக்கம் வளர இன்னொரு முக்கிய மேட்டர் உண்டு. இதை ‘கட்டுப்பாட்டு இடம்’ (Locus of control) என்கிறார்கள் உளவியலாளர்கள். அமெரிக்க படைவீரர்களில் சிலர் அசாத்திய செயல்களை செய்யும் அளவிற்கு தங்களை தாங்களே சுய ஊக்கமளித்து செயல்படுவதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்த போது தெரிந்த உண்மை இது.

தாங்கள் செய்யும் தேர்வுகளால் தங்கள் விதியை தாங்களே நிர்ணயிக்கமுடியும் என்று நம்புபவர்கள் சுய உத்வேகத்துடன் செயல்படு கிறார்கள். இது போன்றவர்கள் தங்கள் வெற்றிக் கும் தோல்விக்கும் சுற்று சூழலை, மற்றவரை காரணமாகக் கூறாமல் தாங்களே காரணம் என்று பொறுப்பேற்கிறார்கள். இது போன்றவர்களின் நம்பிக்கையை ‘உள்ளக கட்டுப்பாடு’ (Internal locus of control) என்கிறார்கள்.

இதற்கு நேர்எதிரில் உள்ளவர்களும் உண்டு. நம் கட்டுப்பாட்டை மீறிய சூழலின் கைப்பிடியில் தான் நம் வாழ்க்கை என்று நினைப்பவர்கள். இது போன்றவர்களின் எண்ணத்தை ‘வெளிப்புற கட்டுப்பாடு’ (External locus of control) என்கிறார் கள். இவர்கள் தங்கள் தோல்விக்கு பிறரை, சூழலை காரணம் கட்டி ஒப்பாரி வைப்பவர்கள்.

சுய ஊக்கத்தைப் பற்றிய பல்வேறு ஆய்வு களிலிருந்து தெரிந்த உண்மைகள், பெற்ற படிப்பினைகள், கிடைத்த அனுபவங்கள் மூலம் சுய ஊக்கத்தை நமக்குள்ளும் மற்றவர்களிடமும் வளர்க்கும் விதங்கள் தெரிந்திருக்கின்றன.

கடினமான வேலைகளை அதிகாரமாக தரா மல், முடிவுகள் போல் தரும் போது ஊழியர்கள் சுய ஊக்கம் அதிகரித்து தாங்களே முன்வந்து முடிப் பார்கள் என்று ஆராய்ச்சிகள் அறிவுறுத்துகிறது.

தேர்வு செய்யும் வாய்ப்பு, அது எப்பேற்பட்ட சாதாரண தேர்வாக இருந்தாலும், தேடி செயல்படுத்த முயலுங்கள். பரீட்சை எழுதிய காலத்தில் கேள்வித்தாளில் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள் என்று ஆசிரியர்கள் கூறியது இதனால் தான். தேர்வு செய்யும் போது சூழல் நம் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு தான் இருக்கிறது என்று நம் மனம் எண்ணுகிறது. அப்பொழுது சுய ஊக்கம் மனதில் தானாக பெருக்கெடுக்கிறது.

ஊழியர்களிடம் சுய ஊக்கத்தை வளர்க்க அவர்களுக்கு வாய்ப்புகளை பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்குங்கள். அதோடு அவர்களுக்கு என்ன தேர்வு செய்தோம் என்பது முக்கியமில்லை. தேர்வு செய்யும் வகையில் சூழல் நம் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அவர்கள் எண்ணும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். இடப்படும் பணி ஆணையாக இல்லாமல் ஊழியர்களின் முடிவுகளாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணியை தாங்களே முன்வந்து நீங்கள் நினைத்ததற்கும் மேலாக சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

உங்கள் ஊழியர்கள் புதிய முயற்சி எடுத் தால் அதை ஆதரியுங்கள். அவர்கள் சுய ஊக்கத் துடன் பணிபுரியும் போது மனதார பாராட்டுங் கள். உங்கள் குழந்தை முதல் அடி எடுத்து வைத்து நடக்கும் போது நீங்கள் கை தட்டி ஊக்கப்படுத்தியதை நினைத்துகொள்ளுங்கள்!

‘நீ பிறவித் தலைவன்’ என்று யாரையும் கூறாதீர்கள். அப்படி கூறும்போது தலைமை பண்பு என்பது பிறப்பால் வருவது, தானாக வளர்வது, கற்றுக்கொள்ள முடியாதது என்ற எண்ணம் ஊழியர்களுக்கு ஏற்படும். அதன் பிறகு தலைமைக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதை நிறுத்திவிட்டு ‘தலைவனாகும் தகுதி இருக்கிறதா’ என்று அறிய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியக் காரனை தேடுவார்கள்.

சுற்றுச் சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, தேர்வு செய்யும் அதிகாரமும் வாய்ப்புகளும் உங்களிடம் உள்ளன என்று தீர்க்கமாய் நம்புங்கள். சுய ஊக்கம் சூப்பராய் உங்களுக்குள் சுரக்கும். வியாபாரத்தில் இது சாத்தியம். மனைவியோடு வாழும் வாழ்க்கையில் சாத்தியமா என்பது பற்றி உளவியலாளர்கள் கருத்து கூட மறுத்துவிட்டனர்!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com


தொழில் ரகசியம்சூழல்ஐடிசுய ஊக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x