

இன்ஃபோசிஸ் நிறுவனர்களான என்.ஆர்.நாராயண மூர்த்தி, மற்றும் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நிறுவனத்திலிருந்து இன்று பிரியாவிடை பெற்றனர்.
நாராயண மூர்த்தி தலைமையில் ஏழு நிறுவனர்கள் சேர்ந்து 1981ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கினர். நாராயண மூர்த்தி 21 ஆண்டுகள் தலைமைச் செயலதிகாரியாக பொறுப்பு வகித்தார். அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்த சி.இ.ஓ. இவரே.
இவருக்குப் பிறகு நந்தன் நிலேகனி, பிறகு கோபாலகிருஷ்ணன் மற்றும் ஷிபுலால் ஆகியோர் இதே பொறுப்பை வகித்தனர்.
8 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக மீண்டும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாராயண மூர்த்தி பொறுப்பேற்றார்.
தற்போது தலைவர் மற்றும் துணைத் தலைவர் பொறுப்புகளிலிருந்து முறையே நாராயண மூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விடைபெற்றனர். ஆனாலும் அக்.10ஆம் தேதி வரை இவர்கள் போர்டில் நீடிப்பார்கள்.
தனது இந்த முடிவு குறித்து நாராயண மூர்த்தி கூறியதாவது:
"எனக்கு எந்த வருத்தங்களும் இல்லை. வாழ்க்கை என்பது சில விஷயங்களைச் செய்வது மற்றும் சில விஷயங்களைச் செய்யாமல் இருப்பது. கடைசியில் இவை ஒட்டுமொத்தமாகவே பார்க்கப்படும். எனவே எனக்கு வருத்தங்கள் எதுவும் இல்லை” என்றார்.
அவரது பதவிக்காலத்தில் சாதித்த முக்கியமான விஷயம் என்று செய்தியாளர்கள் கேட்ட போது, நாஸ்டாக் பங்குச் சந்தையில் இன்போசிஸ் லிஸ்ட் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். நாஸ்டாக்கில் இணைந்த முதல் இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் தனது சி.இ.ஓ மற்றும் நிர்வாக இயக்குனராக விஷால் சிக்கா என்பவரை நியமித்தது. அதாவது இன்போசிஸ் நிறுவனத்தின் சக நிறுவனர்கள் பட்டியலில் இல்லாத முதல் சி.இ.ஓ. விஷால் சிக்கா.