

முதலீட்டுக்காத தங்கம் இறக்குமதி செய்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி. சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள வணிகவியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் தங்கம் குறித்து பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: 2,000-ம் ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் ஒரு சொத்தாகக் கருதப்பட்டது. சர்வதேச ஒட்டுமொத்த உற்பத்தி திறனில் (ஜிடிபி) இந்தியாவின் பங்களிப்பு 30 சதவீதமாக இருந்தது. இப்போது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உள்ள நிலையில் இறக்குமதியை எவ்விதம் அனுமதிக்க முடியும்.
தங்கத்தை முதலீடாகவும், கௌரவ சின்னமாகவும் கருதும் போக்கு மக்கள் மத்தியில் உள்ளது. இத்தகைய சிந்தனை போக்கை மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தங்கத்தை வரதட்சினையாக தருவது மற்றும் பெறுவது நிறுத்தப்பட வேண்டும். அதே போல கோவில்களுக்கு தங்கத்தை பரிசாக அளிப்பதையும் நிறுத்த வேண்டும் என்றார். தங்கத்தை இறக்குமதி செய்வதற்காக வங்கிகளில் கடன் வாங்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
தங்கத்தை வைத்திருப்பதால் எவ்வித ஆதாயமும் இல்லை என்பது உலகம் முழுவதும் நிருபணமாகிவருகிறது. அது ஒரு சிறந்த முதலீடு என்ற கருத்து ஒரு மாயை என்று அவர் குறிப்பிட்டார்.