Last Updated : 17 Jan, 2017 10:35 AM

 

Published : 17 Jan 2017 10:35 AM
Last Updated : 17 Jan 2017 10:35 AM

தொழில் முன்னோடிகள்: வால்ட் டிஸ்னி

(சென்ற வாரத் தொடர்ச்சி)

அந்தப் படுகுழி, டிஸ்னி மிகவும் நம்பிக்கை வைத்திருந்த நண்பர், அவரிடம் கார்ட்டூன் படங்களை வாங்கிக்கொண்டிருந்த விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லர். டிஸ்னியைப் போலவே, அவருக்கும் கார்ட்டூன் படங்கள் மூலம் நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆனால், பேராசை. தங்கமுட்டை இடும் வாத்தைக் கொல்ல முடிவு செய்தார். தில்லாலங்கடி வேலை தொடங்கினார். டிஸ்னிக்குத் தரும் சன்மானத்தைக் குறைத்தார். டிஸ்னி சம்மதிக்கவில்லை. இனிமேல் ஆஸ்வால்ட் கார்ட்டூன்களைத் தரமாட்டேன் என்று மிரட்டினார். வின்க்லர் ஒப்பந்தத்தைக் காட்டினார். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டது டிஸ்னிக்குத் தெரிந்தது. ஒப்பந்தப்படி, ஆஸ்வால்ட் கார்ட்டூனுக்கு ஏகபோக உரிமையாளர் வின்க்லர். கற்பனையையும், உழைப்பையும் கொட்டி டிஸ்னி உருவாக்கிய ஆஸ்வால்ட் மீது அவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

தலையில் இடி விழுந்ததுபோல் உணர்ந்தார் டிஸ்னி. டிஸ்னியிடம் வேலை பார்த்த அத்தனை ஓவியக் கலைஞர்களும் அவரைவிட்டுப் போனார்கள். வின்க்லரோடு கை கோர்த்தார்கள்.

டிஸ்னி மனம் உடைந்து சிதறியது. வயது இருபத்தி ஏழு. திருமணமாகி மூன்று குழந்தைகள். இரண்டாம் பிசினஸ் தோல்வி. நம்பியவர்கள் முதுகில் குத்திய ஏமாற்றம். கையில் கால் காசு இல்லை. அதல பாதாளத்தில் விழுந்த நாம் எழுந்து வருவோமா அல்லது தன் வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் இருபத்தி ஏழாம் வயதிலேயே எழுதப்பட்டுவிட்டதா? டிஸ்னி மனம் முழுக்க மயக்கம், தயக்கம், குழப்பம். பார்க்கும் இட மெல்லாம் இருட்டு, இருட்டு, இருட்டு.

சோகம் ரணமாக மனதை வருத்தியது. கலைஞர்களுக்கு வடிகால் அவர்கள் கைவசமிருக்கும் கலைதான். சோகத்தை மறக்க, அவரை அறியாமலே, கை படங்கள் வரைந்துகொண்டிருந்தது. அறையில் “கீச்’, “கீச்” சப்தம். பார்த்தார். ஒரு எலி அறைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை அறியாமலே எலி படம் வரையத் தொடங்கினார். பெரிய மூக்கு, குட்டி ஒல்லிக் கால்கள். காலையில் மனைவி லிலியன் படத்தைப் பார்த்தார். மனதைப் பறி கொடுத்தார். மிக்கி மவுஸ் என்று பெயர் வைத்தவர் லிலியன்தான்.

ஆஸ்வால்ட் கார்ட்டூனில் வின்க்லரிடம் பெற்ற ஏமாற்றத்தால், டிஸ்னி செய்த முதல் வேலை, மிக்கிக்குக் காப்புரிமை வாங்கினார். ஆரம்பத்தில், மிக்கிக்குப் பொதுமக்களிடம் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. அப்போது, கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் சினிஃபோன் என்னும் தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. மிக்கியைப் பேச வைத்தால்…..டிஸ்னி மூளை நியூரான் சொன்னது. பின்னணிக் குரல் தருபவருக்குத் தரக் காசில்லை. தானே குரல் கொடுத்தார். நடந்தது ஆச்சரியம். பேசும் மிக்கியை அமெரிக்காவே காதலிக்கத் தொடங்கியது. தயாரித்தார் பல மிக்கி கார்ட்டூன் படங்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்.

டிஸ்னி நிறுவனம் திறமைசாலிகளின் பாசறை ஆயிற்று. ஓவியர்கள், எழுத்தாளர்கள், ஒலி, ஒளி நிபுணர்கள், இயக்குநர்கள் சங்கமித்தார்கள். 1935. மிக்கி மவுஸ் படைத்ததற்காக, டிஸ்னிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அதுவரை கறுப்பு வெள்ளையில் கார்ட்டூன்கள் தயாரித்த டிஸ்னி, வண்ணக் கார்ட்டூன்களை அரங்கேற்றினார். மிக்கிக்குத் துணையாக டொனால்ட் டக், கூஃபி, ப்ளூட்டோ பிறந்தார்கள்.

1937. உலகின் முதல் ஒலி, ஒளிக் கார்ட்டூன் படம், ஸ்நோஒயிட்டும், ஏழு குள்ளர்களும் (Snow White and the seven dwarfs) டிஸ்னி தயாரிப்பில் வெளியானது. உலகையே கலக்கியது. வருமானம் கொட்டியது. டிஸ்னி வருட வருடமாக வாங்கியிருந்த அத்தனை கடன்களையும் அடைத்தார், ஸ்டுடி யோவை விரிவாக்கினார், புதுப் புதுத் தொழில்நுட்பக் கருவிகள் வாங்கினார், பல்துறைத் திறமைசாலிகளைப் பணியில் அமர்த்தினார்.

டிஸ்னி தொட்டதெல்லாம் துலங்கும் காலம் தொடங்கிவிட்டது. பினாக்கியோ, ஃபன்ட்டேஷியா என அடுத்துவந்த இரு படங்களும் பெரும் வெற்றி கண்டன. 1950 இல், கார்ட்டூன்களை விட்டு வெளியே வந்து, நடிக நடிகைகள் பங்கேற்ற ட்ரெஷர் ஐலண்ட், ஸ்வேர்ட் அன்ட் தி ரோஸ், 20,000 லீக்ஸ் அண்டர் தி ஸீ என்னும் சினிமாப் படங்களும், மிக்கி மவுஸ், Zorro போன்ற தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்தார். அத்தனையும் பணம்காய்ச்சி மரங்கள்.

அடுத்தாக என்ன செய்யலாம்? ஒரு நாள். டிஸ்னி தன் மனைவியையும், இரண்டு பெண் குழந்தைகளையும் பூங்காவுக்குக் கூட்டிக்கொண்டு போனார். குடை ராட்டினத்தில் மூவரும் ஏறி விளையாடினார்கள். ராட்டினம் மேலே ஏறி இறங்கும்போது சந்தோஷக் கூச்சல் எழுப்பினார்கள். மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தார்கள். பூங்காவுக்கு வந்திருந்த பிற குடும்பங்களையும் டிஸ்னி கவனித்தார். வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் படுஜாலியாக இருந்தார்கள். ஒரு ராட்டினமே இத்தனை சுகானுபவம் தரும்போது, பிரம்மாண்டப் பொழுதுபோக்கு உலகத்தை உருவாக்கினால்….

வீட்டுக்குத் திரும்பி வந்ததும், டிஸ்னியின் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறந்தது, கை அவற்றை ஓவியமாக வடித்தது. டிஸ்னி சொன்னார், ``உலகத்தின் மாபெரும் கற்பனாபுரியாக அது இருக்கவேண்டும்.” நூற்றுக்கணக்கான பல்துறை வல்லுநர்களின் ஐந்து வருடக் கடும் உழைப்பு ஜூலை 1955 இல், கலிபோர்னிய மாநிலத்தில் ஆனஹிம் என்னும் ஊரில் 160 ஏக்கர் நிலப்பரப்பில் டிஸ்னிலாண்ட் கம்பிரமாக எழுந்து நின்றது. மாயாஜாலக் கதைகள், மிக்கி, மினி, டொனால்ட் டக் போன்ற படைப்புகள், அறிவியல் விசித்திரங்கள் எனக் குழந்தை முதல் குடுகுடு கிழவர் வரை அத்தனை பேரையும் வியந்து ரசிக்கவைக்கும் அற்புத உலகத்தை உருவாக்கிவிட்டார்.

மக்களின் மகத்தான வரவேற்பு, நடப்பது நிஜம்தானா என்று டிஸ்னியையே ஆச்சரியப்பட வைத்தது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், மூன்றே மாதங்கள். பல்வேறு நாடுகளிலிருந்து வந்து, டிஸ்னிலாண்டைக் கண்டு ரசித்து மெய்மறந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியது. டிஸ்னி பொழுதுபோக்கு உலகின் தனிக்காட்டு ராஜாவானார்.

சாதனையாளர்கள் வித்தியாசமான வர்கள். எது கிடைத்தாலும் திருப்திபட மாட்டார்கள். எவரெஸ்ட் உச்சியைத் தொட்டாலும், வானத்து நிலவைக் கைகளில் ஏந்த ஏங்குவார்கள். டிஸ்னிலாண்டின் வெற்றி டிஸ்னியின் சாதனை வெறியைத் தணிக்கவில்லை, கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

1964. டிஸ்னிவேர்ல்டைவிட மிக, மிகப் பெரிய பொழுதுபோக்கு உலகம் உருவாக்க முடிவு செய்தார். புளோரிடா மாகாணத்தில் அமைக்கத் திட்டம். நிலம் வாங்கினார். எவ்வளவு தெரியுமா? 27,258 ஏக்கர், அதாவது 110 சதுர கிலோமீட்டர், சென்னை நகரின் பரப்பளவு 178 சதுர கிலோமீட்டர். ஆகவே, டிஸ்னிலாண்ட், சென்னை நகரில் சுமார் 60 சதவிகிதம்.

நெஞ்சம் நிறைந்த ஆசையோடு, டிஸ்னி திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால், பாவம் டிஸ்னி என்று இறைவன் சிரித்துக்கொண்டிருந்தான். 1966. தன் 65 ஆம் வயதில் மரணம் அவரைத் தழுவியது. ஐந்து வருடங்களுக்குப் பின், 1971 இல் டிஸ்னிலாண்ட் திறந்தது. உலகின் பல நாடுகளிலிருந்தும், சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 60,000 பேர் வருகிறார்கள்.

…..

ஆதித் என் பக்கத்து வீட்டு எட்டு வயதுப் பையன். படா கெட்டிக்காரன். அவன் வார்த்தைகள்:

டிசம்பர் 15, 1966. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத நாள். அன்றைக்குத்தான், டிஸ்னி அங்கிள் நம்மைவிட்டுப் போயிட்டார்.

எங்க வீட்டில், நான், இரண்டு வயசுக் குட்டித் தங்கச்சி விபா, தம்பி தேஜஸ், அம்மா, அப்பா, பாட்டி எல்லோரும் சேர்ந்து டிஸ்னி கார்ட்டூன் படங்கள் பார்ப்போம். எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா? மிக்கி, மினி, டொனால்ட் எப்பவுமே இருப்பாங்க. அவங்க இருக்கிறவரைக்கும் டிஸ்னி நம்மோட இருப்பார். தாங்க் யூ அங்கிள்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x