Published : 10 May 2017 10:47 AM
Last Updated : 10 May 2017 10:47 AM

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் தலைவராகிறார் நிசாபா

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் தலைவராக பொறுப்பேற்கிறார் நிசாபா. நுகர்பொருள் தயாரிப்பில் மிகப் பெரிய குழுமமாக விளங்கும் கோத்ரெஜ் குழுமத்தின் தலைவராக உள்ள ஆதி கோத்ரெஜ் தனது தொழில் வாரிசை நேற்று அறிவித்தார். 39 வயதாகும் தனது மகள் ஜிசிபிஎல் தலைவராக பொறுப்பேற்பார் என அவர் கூறினார்.

மிகப் பெரிய தொழில் நிறுவனத்துக்கு தலைமைப் பொறுப்பேற்கும் குறைந்த வயது பெண்மணியாக நிசாபா இருப்பார்.தற்போது நிறுவனத்தின் செயல் இயக்குநராக நிசாபா உள்ளார்.75 வயதாகும் ஆதி கோத்ரெஜ் கடந்த 17 ஆண்டுகளாக ஜிசிபிஎல் தலைவராக உள்ளார். இனி குழுமத்தின் முன்னாள் தலைவர் (எமிரேட்டஸ்) ஆக இருப்பார். புதிய பொறுப்பை இன்று (மே 10) நிசாபா ஏற்கிறார்.

ஆதி கோத்ரெஜின் இளைய மகள் நிசாபா. இவரது மூத்த மகள் தன்யா துபாஷ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருப்பார். கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக இளைய மகன் பிரிஜோஷா கோத்ரெஜ் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ஸ்ட் லிமிடெட் (ஜிசிபிஎல்) நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் தொடர்ந்து ஆதி கோத்ரெஜ் இருப்பார். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விவேக் காம்பிர் செயல்படுவார் என ஜிசிபிஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

``ஜிசிபிஎல் நிறுவனத்தின் அடித்தளம் மிகவும் வலுவானது. இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் தருணமிது. இந்நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு அவர்கள் எடுத்துச் செல்வார்கள்,’’ என நம்புவதாக ஆதி கோத்ரெஜ் கூறினார்.

கோத்ரெஜ் குழுமம் நுகர்பொருள் தயாரிப்பு, ரியல் எஸ்டேட், மின்னணு பொருள் தயாரிப்பு, வேளாண் துறை உள்ளிட்ட பல துறைகளில் செயல்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஜிசிபிஎல் இயக்குநர் குழுமத்தில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதில் கணிசமான பங்களிப்பு நிசாபாவுக்கு உள்ளது. 2007-ம் ஆண்டில் உரமில்லா பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவு செய்து அதன் மூலம் அதிகபட்ச வளர்ச்சியை எட்ட உதவியவர். இந்த காலகட்டத்தில் ஜிசிபிஎல் சந்தை மதிப்பு 20 மடங்கு அதாவது ரூ. 3

ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 60 ஆயிரம் கோடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் கவனம் செலுத்த முடிவு செய்ததும் இவரே. தற்போது நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீத வருமானம் வெளிநாட்டு சந்தை மூலம் கிடைக்கிறது. 2017 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ஜிசிபிஎல் மொத்த வருமானம் ரூ. 9,608 கோடியாகும். முந்தைய நிதி ஆண்டில் வருமானம் ரூ. 8,753 கோடியாக இருந்தது.

கோத்ரெஜ் அக்ரோவெட் எனும் நிறுவனத்தை உருவாக்கி அதன் செயல்பாடுகளை வெளி நாடுகளிலும் பிரபலப்படுத்தியதில் நிசாபாவின் பங்களிப்பு அதிகம்.

பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்வி மையத்தில் இளங்கலைப் பட்டமும், ஹார்வர்டு பல்கலையில் முதகலை நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

``தந்தை வகுத்தளித்த பாதையில் மிகவும் ஒழுக்கமான நிறுவனமாக லாபம் ஈட்டும் குழுமமாக, நிறுவனத்தின் பொதுவான தன்மைகளை காக்கும் வகையில் தான் தொடர்ந்து செயல்படப் போவதாக,’’ நிசாபா குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x