

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பாங்க் ஜன் ஹ்யூக் இன்று மிகப் பெரிய கோடீஸ்வரராக உருவாகியுள்ளார். தற்போதைய நிலவரப்படி இவரின் மொத்த சொத்துமதிப்பு 142 கோடி டாலர். இவர் தொடங்கிய நெட்மார்பிள் நிறுவனம் மிகப் பெரிய கேமிங் நிறுவனமாக மாறியுள்ளது.
தென் கொரியாவில் டெக்ஸ்டைல் நிறுவனங்களின் அருகே உள்ள பின்தங்கிய பகுதியில் பிறந்தவர் பாங்க் ஜன் ஹ்யூக். பல்வேறு காரணங்களால் பள்ளிப்படிப்பை தொடரமுடியவில்லை. ஆனால் கம்ப்யூட்டர் கேமிங் துறையில் இவருக்கு மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் காரணமாக 2000-வது ஆண்டில் நெட்மார்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் வெறும் 8 ஊழியர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். 2011-ம் ஆண்டில் மேலும் இரு நிறுவனங்களை கையகப்படுத்தி பெரிதுபடுத்தினார்.
சண்டை தொடர்பான கணினி விளையாட்டுகளை தொடர்ந்து புதிய வடிவத்தில் நெட்மார்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. ஆசிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நெட்மார்பிள் கணினி விளையாட்டுகள் மிகப் பிரபலமடைந்தது. இந்த நிறுவனம் தென் கொரியாவில் அறிமுகப்படுத்திய லினேஜ் 2 ரெவல்யூசன் என்ற மொபைல் விளையாட்டு முதல் மாதத்திலேயே 17.6 கோடி டாலர் வருமானத்தை தந்தது. அதன் பிறகு நெட்மார்பிள் நிறுவனத்தில் சீன நிறுவனமான டென்செண்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் 50 கோடி டாலர் முதலீடு செய்தது.
சண்டை விளையாட்டுகள் மட்டுமல்லா மல் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற விளையாட்டுகளையும் அறிமுகப் படுத்தியது. இந்த விளையாட்டுகளை 10 கோடிக்கு மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 118 நாடுகளின் அப்ளி கேஷன் பட்டியலில் இவரது விளையாட்டுகள் முதல் பத்து இடங்களில் இருந்தன. கடந்த 2015-ம் ஆண்டில் அப்ளிகேஷன் விற்பனையில் இவரது நிறுவனம் 8-வது இடத்தை பிடித்தது.
தென் கொரிய நாட்டில் சாம்சங், ஹூன்டர் போன்ற நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நேரத்தில் பாங்க் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி சந்தையை குறிவைத்து களமிறங்கி வெற்றி கண்டுள்ளார் என்கின்றனர் வல்லுநர்கள். 2015-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 94.9 கோடி டாலர். அதாவது முந்தைய 2014-ம் ஆண்டை விட 300 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. தற்போது அதைவிட அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. உதாரணமாக நெட்மார்பிள் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு மிகப் பெரிய நிறுவனமான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகம்.
2015-ம் ஆண்டு முதன்முறையாக போர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட கோடீஸ் வரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். இவரின் அப்போதைய சொத்து மதிப்பு 100 கோடி டாலராக இருந்தது.
பின்தங்கிய பகுதியில் இருந்து வந்ததால் பாங்க் ஜென் ஹ்யூக்-கு ஆங்கிலம் அவ்வளவாக பேச தெரியாது என்கின்றனர். ஆனால் தொடர் முயற்சியால் தொழில்நுட்ப ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொண்டு கணினி விளையாட்டு துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவரது நிறுவனம் தற்போது கணினி விளையாட்டுகள் மற்றும் மொபைல் விளையாட்டுகள் துறையில் சர்வதேச அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
கடந்த ஏழு வருடங்களில் தென் கொரியாவில் வெளியிட்ட பொது பங்கு வெளியீட்டில் நெட்மார்பிள் நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பொது பங்கு வெளியீடு மூலம் 2,66,000 கோடி டாலர் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.