ஜூன் 15-ம் தேதிக்குள் ரூ.1,500 கோடி செலுத்தாவிட்டால் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூன் 15-ம் தேதிக்குள் ரூ.1,500 கோடி செலுத்தாவிட்டால் சிறை: சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.1,500 கோடியை செலுத்தாவிட்டால் மீண்டும் திஹார் சிறை செல்ல வேண்டியிருக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் 19-ம் தேதி வரை பரோல் வழங்கி இருக்கிறது.

ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் ரூ.1,500 கோடியும், ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் ரூ. 552 கோடியும் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை செலுத்தாவிட்டால் நேரடியாக சிறை செல்ல இருக்கும் என தீபக் மிஸ்தா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருக்கிறது.

முதலீட்டாளர்களிடம் முறைகேடாக திரட்டிய தொகையை திருப்பி கொடுக்குமாறு சஹாரா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி சஹாரா நிறுவனம் ரூ.24,000 கோடியை அளிக்க வேண்டும். இதில் ரூ.12,000 கோடியை சஹாரா திருப்பி கொடுத்துவிட்டது. மீதமுள்ள தொகையை திருப்பி கொடுக்கவில்லை. உடனடியாக ரூ.5,000 கோடியை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இதில் பாதி தொகையை ஜூன் மாதத்துக்குள் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பிரகாஷ் ஸ்வாமிக்கு சிறை

இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரகாஷ் ஸ்வாமிக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சஹாரா நிறுவனத்தின் நியூயார்க் ஓட்டலை அமெரிக்க நிறுவனம் சார்பாக வாங்குவதாக இவர் தெரிவித்தார். அமெரிக்காவின் எம்ஜி கேபிடல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இவருக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்கியிருந்தது. வாங்குவதற்கு முன்னர் ரூ.10 கோடியை செலுத்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ரூ.10 கோடியை செலுத்தாததால் ஒரு மாத சிறை தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சஹாரா குழுமம் வரும் ஜூன் 15-ம் தேதிக்குள் செபி வங்கி கணக்குக்கு ஆர்டிஜிஎஸ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. அடுத்த விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது சுப்ரதா ராய் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in