கல்யாண் ஜுவல்லர்ஸில் வார்பர்க் பின்கஸ் ரூ. 1,200 கோடி முதலீடு

கல்யாண் ஜுவல்லர்ஸில் வார்பர்க் பின்கஸ் ரூ. 1,200 கோடி முதலீடு
Updated on
1 min read

கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் வார்பர்க் பின்கஸ் நிறுவனம் ரூ. 1,200 கோடியை முதலீடு செய்கிறது. இதற்காக அந்நிறுவனத்தில் எத்தனை சதவிகித பங்குகள் அளிக்கப்பட்டன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

தங்க நகை உற்பத்தி, வடிவமைப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் 55 விற்பனையகங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 6 விற்பனையகங்களும் உள்ளன. 21 ஆண்டுகளாக தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் 2016-ம் ஆண்டுக்குள் விற்பனையகங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் 28 விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். கல்யாணராமன் தெரிவித்தார். குவைத், கத்தார், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் விற்பனையகம் தொடங்க உள்ளாக அவர் மேலும் தெரிவித்தார். தற்போது நிறுவனத்தின் வருமானத்தைத் தெரிவிக்காத அவர், ரூ. 25 ஆயிரம் கோடி வருமானத்தை எட்டுவதே இலக்கு என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் ஜுவல்லரி நிறுவனத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச முதலீடு இதுவாகும். வார்பர்க் நிறுவனம் இதற்கு முன்பு அம்புஜா சிமென்ட்ஸ்,பார்தி ஏர்டெல், டெய்னிக் பாஸ்கர், டிலிஜென்ட் பவர், கேபிடல் பர்ஸ்ட், கங்காவரம் துறைமுகம், ஹெச்டிஎப்சி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியில் முதலீடு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in