Published : 24 Nov 2013 12:56 PM
Last Updated : 24 Nov 2013 12:56 PM

வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிக்க ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறையைச் சமாளிக்க நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை 'இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு' நடத்திய கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு கூறினார். மேலும் பேசியதாவது:

கடந்த நிதி ஆண்டில் நம்நாடு 88 பில்லியன் டாலர்கள் நடப்புக் கணக்கில் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. இவ்வளவு பற்றாக்குறையை வைத்துக் கொண்டு ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறுவது என்பது கடினம். இந்த நிதி ஆண்டின் ஆரம்பத்தில் அந்தப் பற்றாக்குறையை 70 பில்லியன் டாலர்களாகக் குறைக்க முயற்சித்தோம். இந்த நவம்பர் 1ம் தேதி அதை 60 பில்லியனாகக் குறையும் என்று எதிர்பார்த்தோம். கடந்த வாரத்தில் 56 பில்லியன் டாலர்களாக குறையும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருக்கிறது.

இந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். இதைக் குறைக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். நிலக்கரி, மின்னணு வன்பொருட்கள் போன்ற வளங்கள் நம்மிடமே இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் இறக்குமதி செய்கிறோம். இது போன்றவற்றை இறக்குமதி செய்வதைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் வர்த்தகப் பற்றாக்குறை குறையும்.

நம் நாட்டுப் பொருளாதாரத்தின் இரு முக்கியத் தூண்கள் உள்நாட்டு சேமிப்பும் ஏற்றுமதியும் ஆகும். கடந்த ஆண்டு நம்மிடம் 30.8 சதவிகிதம் உள்நாட்டு சேமிப்பு இருந்தது.

கடந்த நான்கு மாதங்களில் நாம் ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம். அக்டோபர் மாதத்தில் மட்டும் 13.5 சதவிகிதமாக ஏற்றுமதி அதிகரித் துள்ளது. இதே அளவு ஏற்றுமதியை நாம் இனி வரும் நான்கு மாதங்களில் தக்க வைத்துக்கொண்டால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க முடியும்.

ஏற்றுமதிக்கு வைத்துள்ள பொருட்கள் விரைவாக ஆய்வு செய்யப்படுவதில்லை. அதனால் அப்பொருட்கள் ஏற்றுமதியாவது தாமதிக்கப்பட்டு நாட்கணக்கில் தேங்குகின்றன. அதற்கேற்றவாறு வரியும் செலுத்தப்படுவதால் அது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையையும் பாதிக்கும். இந்த தாமதத்தைக் களைய புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

1991ம் ஆண்டு நான் வர்த்தக அமைச்சராகப் பதவி யேற்றது முதல் இன்று வரை ஏற்றுமதியாளர்களுக்கு ஆதர வாகவே இருந்து வருகிறேன். உங்களின் கருத்துகளை அரசு வர வேற்கிறது.

கருத்துகளில் மாறுபாடு இருந்தாலும் இலக்கு ஒன்றுதான். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் அது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x