

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் தற்போதைய பொருளா தாரத்தில் தேக்க நிலையிலும் மேற்கு வங்க மாநிலம் ரூ. 2.35 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அவர், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், உற்பத்தித்துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் முதலீடுகள் குவிந் துள்ளதாகக் குறிப்பிட்டார். உள் நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து 3,600 கோடி டாலர் மதிப்பிலான முதலீடும் மாநிலத்துக்கு வர உள்ளதாக அவர் கூறினார்.
ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பி லான மாநகர ரயில் போக்குவரத்து திட்டத்தில் சீன நிறுவனம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. சீன நிறுவனங்கள் நடுத்தர, சிறு குறுந்தொழிலில் ரூ.61,765 கோடியும், உற்பத்தித் துறையில் ரூ.50,710 கோடியும், நகர்ப்புற மேம்பாட்டில் ரூ. 46,600 கோடி யும், போக்குவரத்துத்துறையில் ரூ.38,810 கோடியும், பெருநகர ரயில் போக்குவரத்துத் திட்டத்தில் ரூ.27,000 கோடியும் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன.
பசுமை நகரை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசுடன் ஹட்கோவும் சேர்ந்து கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் துள்ளதாக மம்தா பானர்ஜி கூறினார்.
இன்னும் பல முதலீடுகள் வர உள்ளன. அவை அனைத்தும் இறுதி கட்ட நிலையில் உள்ளன. அவை இறுதி ஆனதும் அதுபற்றிய விவரம் வெளியிடப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முந்தைய இரண்டு முதலீட் டாளர் மாநாடு மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் 4.93 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. இதில் 40 சதவீத பணிகள் தற்போது நிறைவேறியுள்ளன. முதன் முதலில் இத்தகைய முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டபோது ரூ. 2.42 கோடி மதிப்பிலான முதலீடுகள் வந்தன. கடந்த ஆண்டு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளதாக மம்தா கூறினார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகும் மாநில அரசின் சிறப்பான செயல்பாடு கார ணமாக முதலீடுகள் வந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேற்கு வங்கத்தில் ரூ.14 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப் போவதாக ஆர்பி கோயங்கா குழுமம் அறிவித்துள்ளது. எப்எம்சிஜி துறையில் ரூ. 10 ஆயிரம் கோடியை அடுத்த சில ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக குழுமத் தலைவர் ஆர்.பி.சஞ்ஜீவ் கோயங்கா தெரிவித்தார். பார்தி எண்டர் பிரைசஸ் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 4 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக பார்தி என்டர்பிரைசஸ் துணைத் தலைவர் ராகேஷ் பார்தி மிட்டல் தெரிவித்தார். தங்கள் குழுமம் மேற்கு வங்கத்தில் இது வரை ரூ.30 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உணவு மற்றும் ஆயத்த ஆடை பிரிவில் தங்கள் குழுமம் அதிக அளவிலான முதலீடுகளை மேற்கு வங்கத்தில் செய்துள்ளதாக பியூச் சர் குழுமத் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்தார். 2 லட்சம் சதுர அடி பரப்பில் ஒரு மையத்தை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத் தப் போவதாக அவர் மேலும் கூறினார்.
ஹீரோ மோட்டார் குழுமம் மேற்கு வங்கத்தில் ஆண்டுக்கு 30 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் வகையிலான நவீன ஆலையை அமைக்க உள்ளதாக ஹீரோ மோட்டார் குழுமத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பங்கஜ் முன்ஜால் தெரிவித்தார். இங்கு தயாராகும் வாகனங்களில் 5 சதவீதம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மண்ணின் மைந்தரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநிலம் முதலீட்டுக்குச் சிறந்தது, இங்கு முதலீடு செய்யுங்கள் என முதலீட் டாளர்களுக்கு அழைப்பு விடுத் தார். மாநில அரசு நிறுவனமான ஜிஇசிஎல் ரூ.6,800 கோடியும், கெயில் ரூ.6 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. 600 கிமீ. குழாய்ப்பாதையை ஜகதீஷ்பூரி லிருந்து கொல்கத்தா மற்றும் ஹால்தியா வரை அமைக்க உள்ள தாக கெயில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.சி. திரிபாதி தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் 27 நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.