

சூப்பர் மார்க்கெட் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்ட்ஸின் (டிமார்ட்) பொதுப்பங்கு வெளியீடுக்கு மார்ச் 8 முதல் 10 வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 21-ம் தேதி இந்த பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிகிறது.
இந்த நிறுவனத்துக்கு டிமார்ட் என்னும் பெயரில் 45 நகரங்களில் 118 சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. கடந்த அக்டோபரில் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓ வெளியானது. அந்த நிறுவனம் ரூ.3,000 கோடி திரட்டியது. அதற்கடுத்து மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். சுமார் ரூ.1,800 கோடி அளவுக்கு நிதி திரட்ட அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பங்கு விலையாக 300 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரட்டப்படும் நிதியின் மூலம் கடன்களை அடைப்பது மற்றும் விரிவாக்கப்பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில் ஐபிஓ அனுமதிக்காக செபியிடம் விண்ணப்பித்தது. டிசம்பர் 6-ம் தேதி அதற்கான அனுமதி கிடைத்தது.
கடந்த 2007-ம் ஆண்டு விஷால் ரீடெய்ல் நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு செய்தது. அதன்பிறகு, ரீடெய்ல் துறையை சேர்ந்த நிறு வனம் பட்டியலிடுவது இப்போது தான். கடந்த நிதி ஆண்டில் (மார்ச் 31 2016 வரை) நிறுவனத்தின் வருமானம் ரூ.8,600 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபம் ரூ.320 கோடியாகும்.
கடந்த 2016-ம் ஆண்டில் 26 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்தன. இதன் மூலம் ரூ.26,494 கோடி நிதி சந்தையில் திரட்டப்பட்டது.