Last Updated : 14 Oct, 2014 11:06 AM

 

Published : 14 Oct 2014 11:06 AM
Last Updated : 14 Oct 2014 11:06 AM

டிஎல்எஃப் நிறுவனத்துக்கு செபி தடை

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள டிஎல்எஃப் நிறுவனத்துக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மூன்று ஆண்டு தடை விதித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவர் கே.பி. சிங் மற்றும் 5 உயர் அதிகாரிகளுக்கு பங்குச் சந்தை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு இந்நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் பணம் திரட்டியது. அப்போது ஐ.பி.ஓ.வில் இடம்பெற வேண்டிய தகவல்களை வேண்டுமென்றே மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து செபி விசாரணை நடத்தி அந்த அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிறுவனம் மீதான புகார் குறித்து செபி-யின் முழு நேர உறுப்பினர் ராஜீவ் அகர்வால் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கியமான தகவல்களை இந்நிறுவனம் வேண்டுமென்றே மறைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செபி விதிகளை இந்நிறுவனம் தனது ஐபிஓ வெளியீட்டின்போது மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது மிகப் பெரும் விளைவுளை ஏற்படுத்தும் என்று தெரிந்தே இந்தத் தவறை இந்நிறுவனம் செய்துள்ளது தெரிய வந்ததாக அகர்வால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் விதிகளை மீறியுள்ளனர். அதாவது முறைகேடான மற்றும் முறையற்ற வர்த்தக நடைமுறை விதிகளை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள விதிகளை இவர்கள் பின்பற்ற வில்லை.

நிறுவனத்தின் தலைவர் கே.பி. சிங், துணைத் தலைவர் ராஜீவ் சிங் (இவர் கே.பி.சிங்கின் மகன்), முழு நேர இயக்குநரும் மகளுமான பியா சிங், நிர்வாக இயக்குநர் டி.சி. கோயல், கமலேஷ்வர் ஸ்வரூப், ரமேஷ் சங்கா ஆகியோர் மூன்று ஆண்டுகள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு ஐபிஓ வெளியீடு மூலம் இந்நிறுவனம் ரூ. 9,187 கோடியை திரட்டியது. 2007-ம் ஆண்டு முதலீட்டாளர் கிம்சுக் கிருஷ்ண சின்ஹா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் டிஎல்எப் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான பெலிசிட், ஷாலிகா சுதிப்தி ஆகியன முறைகேடாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு 2010-ம் ஆண்டு செபி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முழு நேர இயக்குநர் விசாரணை நடத்தினார். இந்நிறுவனங்கள் பற்றிய விவரத்தை டிஎல்எப் தனது ஐபிஓ தகவல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அவை முறைகேடாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. செபி உத்தரவு குறித்து டிஎல்எப் தரப்பில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. வர்த்தகம் முடிவில் டிஎல்எப் நிறுவனப் பங்குகள் 3.71 சதவீதம் சரிந்து ரூ. 146.70-க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x