Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

உங்களுக்கு திங்கட்கிழமை என்றால் திகிலா?

திங்கட்கிழமை காலை என்றால் உங்கள் மனதுக்கு என்ன தோன்றுகிறது? “ஐயோ...மீண்டும் ஆஃபீஸா? அதே ஓட்டம்..அதே போராட்டமா?” என்று மனம் கலவரமடைகிறதா? அல்லது “சூப்பர். நாளை திங்கட்கிழமை. பட்டையைக் கிளப்பி விடலாம்!” என்று பணியிடத்தை நினைத்து மனம் குதூகலம் அடைகிறதா?

இந்த மனநிலைதான் உங்கள் வாழ்க்கையின் உற்சாகத்தை நிர்ணயிக்கிறது. உங்கள் வாழ்வின் விழிப்பு நேரத்தில் 75% வேலைக்காக செலவிடுகிறீர்கள். அதனால் 75% எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்கள் என்பது தான் உங்கள் வாழ்வின் உற்சாகத்தையே தீர்மானிக்கிறது.

என் தந்தை அரசாங்கத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வெகு சில நாட்களே அவர் என்னை தன் அலுவலகத்தில் அனுமதித்திருக்கிறார். எழிலகம் அலுவலகத்தில் பல துறைகள் தாண்டி அவர் அறைக்கு செல்ல வேண்டும். நவாப் அரண்மனையின் கட்டமைப்பும், அடர்ந்த மரங்கள் கொண்ட சூழலும், கடற்கரை காற்றும் மிகுந்த ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தும். வழி நெடுகிலும் உள்ள மனிதர்களை பார்த்தவாறு செல்வேன். பெரும்பாலும் உணர்வுகள் அற்று, கனத்த மௌனத்துடன், இயந்திரத்தனமாக நகர்ந்து, போலி மரியாதையும் மேலதிகாரிகளுக்கு விலகி, கோப்புகளை கைகள் நகர்த்தினாலும் மனம் எங்கோ உள்ளது போல...ஒரு திறந்த வெளி சிறைச்சாலை கைதிகள் பணியாற்றுவது போலத் தோன்றும்.

அதிலும் குறிப்பாக ஒருவர் பற்றி என் அப்பாவிடமே கேட்டே விட்டேன்: “ஏம்ப்பா அவர் எப்பவும் எழவு வீட்டிலே உட்கார்ந்திருக்கிற மாதிரியே இருக்கிறார். ‘பாடி எடுத்தாச்சா?’ ன்னு தான் கேக்கத் தோன்றும் அவரைப் பார்த்தாலே!”

என் தந்தை அவரை விட்டுக் கொடுக்கவில்லை. இருந்தும் என் சொல்லாடலை ரசித்தார்.

பிற்காலங்களில் அரசு வேலைகளில் நடுத்தட்டு மக்களின் சிக்கல்களையும் அரசு அலுவலக கலாச்சாரத்தையும் அறிந்த பின் அவர் போன்றோர் மீது புரிதலும் அனுதாபமும் வந்தது. அதை விட பரிதாபம் அரசாங்க அலுவலகங்களுக்கு தங்கள் வேலைக்கு வந்து நிற்கும் மக்கள் கூட்டம் மேல் வந்தது.

லஞ்சம், சுரண்டல், ஏமாற்று வேலை பற்றி பேச வேண்டாம். நேர்மையானவர்கள் கூட மக்கள் மீது அலட்சியம், வேலை பற்றி தெளிவு தராமை, எதிராளியின் நேரத்தை மரியாதை செய்யாமை என பொறுப்பற்று செயல்படுவதைப் பார்க்கிறோம்.

இது நிரந்தர வேலைகள் கொண்ட அரசாங்கத் துறைகள், அரசு வங்கிகள், மின்சார வாரியம் மட்டுமின்றி நிரந்தர வேலைகள் இல்லா தனியார் நிறுவனங்களிலும் பார்க்கிறோம்.

“போன் பண்ணா எடுக்கவே மாட்டாங்க. இல்லாட்டி போனை கீழ எடுத்து வச்சுடுவாங்க.”

“ஆஃபீஸ்ல அவங்கள பிடிக்கறது ரொம்ப கஷ்டம்.”

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்க. ஆனா காரியம் நடக்காது.”

“எந்த கேள்வி கேட்டாலும் நாம தப்பு பண்ற மாதிரியே பதில் சொல்வாங்க.”

இவைகளை எங்கெல்லாம் கேட்கிறோம்? இது ஏன்? உற்சாக சக்தியுடன் வேலை செய்யாதோர் தங்கள் சக பணியாளர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் திருப்திகரமாக செயல்பட முடியாது.

இவர்களிடம் உள்ள சக்தி நிலையை Toxic Dump (விஷ சாக்கடை) என்கின்றனர் Fish புத்தகத்தில் அதன் ஆசிரியர்கள்.

ஸ்டீபன் லுண்டின், ஹேரி பால் மற்றும் ஜான் க்றிஸ்டென்சன் எழுதிய இந்த தம்மாத்தூண்டு 100 பக்க புத்தகம் ஒரு Best Seller.

சோர்வடைந்த, உற்சாகம் இழந்த பணியாளர்களை உத்வேகப்படுத்தி தன் மூலம் வியாபார வெற்றிகள் பெறுவது எப்படி என்று சொல்வதினால் இது இருட்டுக்கடை அல்வா போல சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கிறது உலகமெங்கும்.

ஒரு நிறுவன ஆலோசகனாக பல முறை இந்த புத்தகத்தை முதலாளிகளை வாங்கி படிக்கச் சொல்லியிருக்கிறேன். இந்த புத்தகம் வீடியோ படமாகவும் வந்துள்ளது. இதன் சாரத்தை பயிற்சி மூலம் முதலிலும் பின்னர் சரியான மனித வளச் செயல்பாடுகளால் ஒரு புது பணி கலாச்சாரமாகவும் கொண்டு வந்தால் அது வியாபாரத்தை கூட்டும் என்று அடித்துச் சொல்வேன்.

Fish ஒரு புனை கதை; ஒரு கதை படிக்கும் சுவாரசியத்துடன் பாடத்தையும் படிக்கலாம்.

மேரி ஜேன் புதிதாக சேர்ந்த அதிகாரி. அந்த நிறுவனத்தின் மூன்றாம் மாடி தவறான காரணங்களுக்காக மிகப் பிரபலம். Toxic Dump என்று பெயர்படும் அளவிற்கு மோசமான மனித உறவுகள். அவர்களிடம் பேசவே தயங்குகிறார்கள் எல்லாரும். அது நிறுவன முடிவுகளையும் பாதிக்கிறது. என்ன செய்ய என்று தெரியாமல் குழம்பிப் போகிறாள் மேரி.

அப்போது எதேச்சையாக பகல் நேர உலாவாக பக்கத்துத் தெரு செல்கையில் ஒரு மீன் சந்தை தென்படுகிறது. தென்படுகிறது என்பதை விட கேட்டது என்று சொல்லும் அளவிற்கு ஆரவாரமான அமளி. மீன் விற்பதிலும் வாங்குவதிலும் இவ்வளவு உற்சாகமும் சந்தோஷமும் இருக்க முடியுமா எனும் அளவிற்கு கொண்டாட்டம். ஒவ்வொரு மீனையும் ஊர் பெயர் சொல்லித் தூக்கி எறிய ஒருவர் லாவகமாக ஒற்றைக்கையில் பிடித்து பொட்டலமிடுகிறார். பாட்டும் நடனமும் சேர்ந்த திருவிழா சூழ்நிலை.

உடன் பணியாற்றும் பில் என்பவன் சியாட்டலில் உள்ள பைக் ப்ளேஸ் ஃபிஷ் மார்கெட் எனும் அந்த இடத்தின் தொழில் உளவியல் தன்மையை விளக்குகிறான்.

அந்த பாடங்களைக் கொண்டு தன் நிறுவனத்தின் கலாச்சாரத்தை மாற்றி அமைக்கிறார்கள். இது தான் கதை.

4 பாடங்கள் தான்:

Choose your Attitude- உங்கள் மனோபாவத்தை தேர்ந்தெடுங்கள்.

Play- விளையாடுங்கள்

Make their day- எதிராளியின் தினத்தை அர்த்தப்படுத்துங்கள். முழுமையாக்குங்கள்.

Be Present- இங்கு, இப்போது முழுமையாக பணியாற்றுங்கள்.

ஸ்டீபன் லுண்டின் டாக்டரேட் பட்டம் பெற்றவர், பேச்சாளர், நிர்வாக பயிற்சியாளர், சினிமாக்காரர் என பன்முகத் தன்மை கொண்டவர். ஹேரி பால் எனும் கென் ப்ளாங்கார்ட் நிறுவனத்தை சேர்ந்தவரையும், ஜான் க்றிஸ்டென்சன் எனும் விருது வாங்கிய திரைப்பட இயக்குநரையும் வைத்து எழுதியிருப்பது இந்த புத்தகத்தின் ஆழத்தையும் வீச்சையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த மீன் உங்கள் பணியாளர்களை உற்சாக சமுத்திரத்தில் தள்ளி/ துள்ளி விளையாட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டாக்டர். ஆர்.கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x