

ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சஹாரா குழுமம் ரூ.5,072 கோடியை செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராயின் ஜாமீனை வரும் ஏப்ரல் 17-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதற்கிடையில் சஹாரா நிறுவனம் எந்தெந்த நிறுவனங் களை விற்கப்போகிறது என்னும் பட்டியலை உச்ச நீதிமன்றத்திடம் சமர்பித்தது. அடுத்த விசாரணை ஏப்ரல் 17-ம் தேதி இருக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சஹாரா குழுமத்திடம் இருந்து காஸியாபாத் மேம்பாட்டு வாரியம் 91 ஏக்கர் நிலத்தை வாங்கியது. இதற்காக ரூ.1,112 கோடி சஹாராவுக்கு அந்த வாரியம் செலுத்தவேண்டும். சஹாராவுக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு பதிலாக இந்த வாரியம், உச்ச நீதிமன்றத்திடம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல நியூயார்க்கில் இருக்கும் நியூபிளாசா ஓட்டல் நிறுவனத்தை வாங்க இருக்கும் எம்ஜி ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.750 கோடியை செலுத்த வேண் டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.