விலை பாகுபாடு என்றால் என்ன?

விலை பாகுபாடு என்றால் என்ன?
Updated on
1 min read

விலை பாகுபாடு (Price discrimination)

விலை பாகுபாடு இரண்டு விதத்தில் செயல்படும். ஒன்று, ஒரு பொருளின் உற்பத்தி செலவு சமமாக இருக்க, வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்வது ஒரு வித விலை பாகுபாடு. இரண்டு, ஒரு பொருளின் உற்பத்தி செலவு சமமாக இருக்க அப்பொருளின் வெவ்வேறு அளவுகளை வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்வதும் விலை பாகுபாடுதான்.

ஒரு முற்றுரிமை சந்தையில் முற்றுரிமையாளன் வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்வது எளிது. ஒவ்வொரு சந்தையிலும் உள்ள வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப அவரால் வெவ்வேறு விலைகளை நிர்ணயம் செய்து வியாபாரம் செய்யமுடியும்.

ஒரு பொருளின் விலை-தேவை நெகிழ்ச்சி ஒரு சந்தையில் அதிகமாக இருந்தால் அச்சந்தையில் குறைந்த விலையிலும், விலை-தேவை நெகிழ்ச்சி குறைவாக இருக்கும் சந்தையில் அதிக விலையிலும் பொருட்களை விற்கமுடியும்.

பல நேரங்களில் பொருட்களை அதிக அளவுகளில் வாங்கும் போது விலையை குறைத்து வாங்குவதும் உண்டு. ஒரு வாழைப்பழம் வாங்கும்போதும் ஒரு டஜன் வாழைப்பழங்களை வாங்கும்போதும் விலையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

விலை ஒழுங்குமுறை (Price regulation)

பல சந்தைகளில் பொருட்களின் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன, நாம் கொடுக்கும் விலை சரியாக நிர்ணயிக்கப்பட்ட விலையா என்றெல்லாம் சந்தேகங்கள் வரலாம். இதுபோன்ற நிலைகளில் அரசோ அல்லது சந்தை ஒழுங்குமுறை ஆணையமோ நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு விலைகள் நிர்ணயம் செய்வதைக் கட்டுப்படுத்தலாம்.

தொலைபேசி சேவை, காப்பீடு, மின்சாரம், போன்ற பல துறைகளில் ஒழுங்கு முறை ஆணையங்கள் செயல்படுகின்றன. இவை இச்சந்தையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் சேவைக்கு எவ்வாறு விலைகளை நிர்ணயிக்கின்றன என்பதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றன.

அண்மைக்காலம் வரை பெட்ரோலிய பொருட்களுக்கான விலைகளை அரசு நிர்ணயித்துவந்தது. இப்போதுகூட பல விவசாயப் பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலைகளை அரசு நிர்ணயிக்கிறது. அதாவது அரசு நிர்ணயித்த விலைகளில் தான் விவசாயிகளிடமிருந்து பொருட்களை வியாபாரிகள் வாங்கலாம், அல்லது அவை அனைத்தையும் அரசே வாங்கிக்கொள்ளும். இவை எல்லாம் விலை ஒழுங்குமுறையின் வெவ்வேறு அம்சங்களாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in