

ஆண்டின் தொடக்க நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் உயர்ந்தன. நேற்றைய வர்த்தகத்தில் சென் செக்ஸ் 43 புள்ளிகள் உயர்ந்து 26190 புள்ளியிலும், நிப்டி 16.85 புள்ளிகள் உயர்ந்து 7963 புள்ளியிலும் முடிவடைந்தன. டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தைகள் இந்த நிலைக்கு இப்போதுதான் உயர்கின்றன.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ குறியீடுகள் தொடர்ந்து மூன்றா வது வாரமாக உயர்ந்து வருகின் றன. துறைவாரியாக பார்க்கும் போது ரியால்டி குறியீடு 1.99 சதவீதம் உயர்ந்தது. அதேபோல கேபிடல் குட்ஸ், ஆட்டோ, பவர் உள்ளிட்ட குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. மாறாக ஐடி மற்றும் டெக்னாலஜி குறியீடு சரிந்து முடிந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பி.ஹெச்.இ.எல். ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன. மாறாக கெயில், என்டிபிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல் மற்றும் எம் அண்ட் எம் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,123 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கினர்.
விமான பங்குகள் உயர்வு
விமான எரிபொருள் விலை 10 சதவீதம் வரை குறைக்கப் பட்டதால் விமானத்துறை நிறுவன பங்குகள் உயர்ந்து முடிந்தன. ஸ்பைஸ்ஜெட் பங்கு 9.4 சதவீதம் உயர்ந்து 82.35 ரூபாயாக இருக்கிறது. அதேபோல இண்டர் குளோப் பங்கு 8.79 சதவீதம் உயர்ந்து 1,343 ரூபாயில் முடிவடைந்தது. ஜெட் ஏர்வேஸ் பங்கும் 8.24 சதவீதம் உயர்ந்து 760 ரூபாயில் முடிவடைந்தது. நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு தன்னுடைய 52 வார உச்சத்தை தொட்டது.
விமான நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 40% வரை எரிபொருளுக்கு செலவாகி றது. இப்போது எரிபொருள் விலை குறைந்துள்ளதால் இந்த பங்குகள் உயர்ந்துள்ளன