

அரசியல் காரணங்களுக்காக சிபிஐ நடவடிக்கை எடுத்ததாக என்டிடிவி கூறியிருக்கும் நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை சிபிஐ மறுத்திருக்கிறது. முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் சிபிஐ தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சிபிஐ கூறி யிருப்பதாவது: ஊடக சுதந்திரத்தை முற்றிலும் மதிக்கிறோம். ஐசிஐசிஐ வங்கியின் பங்குதாரர் அளித்த புகார் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் வாராண்ட் பிறப்பித்த பிறகே என்டிடிவி அலுவலகம் மற்றும் நிறுவனர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
என்டிடிவியின் ஸ்டூடியோ, செய் தியறை உள்ளிட்ட ஊடக செயல் பாடுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமலேயே சோதனை நடத்தப் பட்டது. ஊடக செயல்பாடுகளை சிபிஐ மதிக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி தனியார் வங்கி. தனியார் வங்கியில் கடன் வாங்கியதற்காக சிபிஐ எப்படி சோதனை நடத்தமுடியும் என என்டிடிவி கேள்வி எழுப்பி இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. ரமேஷ் கெல்லிக்கு எதிரான வழக்கில், ஊழல் தடுப்பு சட்டம் தனியார் வங்கிகளுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. சட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஐ செயல்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
48 கோடி இழப்பு எப்படி?
மார்ச் 31, 2009-ம் ஆண்டு நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ.349 கோடி. வட்டி மற்றும் வட்டி தள்ளுபடி ஆகியவை சேரும் பட்சதில் 2009-ம் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த தொகை 396 கோடி. ஆனால் என்டிடிவி 350 கோடி மட்டுமே செலுத்தியது. மீதமுள்ள தொகை, அதற்குரிய வட்டியை சேர்க்கும் போது ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.