Last Updated : 21 Sep, 2013 09:01 AM

 

Published : 21 Sep 2013 09:01 AM
Last Updated : 21 Sep 2013 09:01 AM

ரகு Vs பங்குச் சந்தை

வேறு எந்த கவர்னரும் செய்யத் துணியாத காரியமாக, பதவி ஏற்ற அன்றே (செப்.5) ரகுராம் ராஜன், பல புதிய திட்டங்களை அறிவித்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதைத் தடுத்து அது மேல் நோக்கிச் செல்ல அடித்தளம் அமைத்தார். செப்டம்பர் 19-ம் தேதி அமெரிக்காவின் மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) தான் முன்பு கூறியபடி டாலர் அளிப்பைக் குறைக்குமா என்று அறிவிக்கும். எனவே அதனைக் கருத்தில் கொண்டு நிதிக் கொள்கையை வகுக்க வேண்டியுள்ளதாக ராஜன் கூறினார். அதன் படி செப்டம்பர் 20 அன்று தனது முதல் காலாண்டு பணக் கொள்கையை அறிவித்தார்.

பொருளாதார சூழல் என்ன?

பண அளிப்பையும், வட்டி விகிதத்தையும் நெறிப்படுத்தி, பண வீக்கத்தை அதிகரிக்காமலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையாமலும் வைத்திருப்பது நிதிக் கொள்கையின் நோக்கம். இதுமட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காத வகையிலும் பணக்கொள்கை இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்து. தொடர்ந்து இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவடைவதை நாம் அறிவோம். 2013-14-ம் ஆண்டு இந்தியா 6.7% வளர்ச்சி அடையும் என பட்ஜெட்டில் அரசு நம்பிக்கை தெரிவித்த போதிலும், 2013-14 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 4.4% வளர்ச்சியையே அடைய முடிந்தது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் கண்ட மிகக் குறைந்த வளர்ச்சியாகும். இந்நிலையில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் விதமாக, பண அளிப்பை உயர்த்தி, வட்டி விகிதத்தைக் குறைத்து, முதலீட்டிற்கான பண வரத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ஒரு நிலைப்பாடாகும்.

ஒட்டுமொத்த விற்பனை விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் 5.79% ஆக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 8.01 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால் நுகர்வோர் விலை குறியீடு ஜூலை மாதத்தில் 11.24 சதவிகிதம் உயர்ந்தது. அதைவிட சற்று குறைவாக ஆகஸ்ட் மாதத்தில் 11.06 சதவிகிதம் உயர்ந்தது. இவ்விரண்டு பணவீக்க குறியீடுகளும் இந்தியாவில் பணவீக்கம் உயர்ந்த நிலையில் உள்ளதை காட்டுகிறது. பண அளிப்பினை உயர்த்துவதற்கான வாய்ப்பை இந்த அதிக பணவீக்கம் குறைத்துவிடுகிறது.

ரூபாய் - டாலர் நிலைமை:

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னாராக பதவி ஏற்பதற்கு முன், அதாவது செப்டம்பர் 4-ம் தேதி ஒரு டாலர் 67.07 என இருந்தது. ஆனால் செப்டம்பர் 19-ம் தேதி ரூபாய் மதிப்பு 61.80 என உயர்ந்தது. எனவே ராஜனும், அதற்கு முந்தைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவும், இந்திய அரசும் எடுத்த சில நடவடிக்கைகள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்தின.

டாலர் வரத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உயருமேயானால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். கடந்த மூன்று மாததில் சந்தை சரிந்த போது இந்தியாவிலிருந்து அதிகளவில் டாலர் வெளியே சென்றது. இப்போது அவை மீண்டும் வரத்தொடங்கி இருக்கின்றன. எனவே பங்குச்சந்தை சரிவடையாமலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறையாமலும் இருந்தால், அன்னிய முதலீடு வரும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயரும். மேலும் மதிப்பு உயர ஆரம்பித்தவுடன் வெளிநாட்டு இந்தியர்கள், ஏற்றுமதியாளார்கள் என பலரும் டாலரை இந்தியாவுக்கு கொண்டுவந்து ரூபாய் மதிப்பினை உயர்த்துவார்கள்.

அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை குறையவில்லை, பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை, என்ற காரணத்தால் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கி மாதம் தோறும் 85 பில்லியன் டாலர் கடன்பத்திரங்களை வாங்கி டாலர் அளிப்பினை உயர்த்தும் என்று அறிவித்தார். இதன் விலைவாக இந்தியாவின் ரிசர்வ் வங்கி பண அளிப்பை கட்டுப்படுத்தாது என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் உயர்ந்தன. அதேபோல டாலர் மதிப்பும் சரிந்து ரூபாய் மதிப்பும் உயர்ந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ரூபாய் மாற்று மதிப்புக்கு வலுசேர்க்கும் என்றே நினைத்தன.

இப்போது வளர்ச்சியைத் தூண்டுவதற்கு குறைந்த வட்டி விகிதம் வேண்டும். அதே நேரத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இந்த இரண்டையும் ரிசர்வ் வங்கி செய்துள்ளது. ஆர்.பி.ஐ. இரண்டு வழிகளில் வங்கிக்கு கடன்கொடுத்துவருகிறது. ரெபோ என்பது ஒரு வழி. இன்னொன்று எம்.எஸ்.எஃப்.(கீழே இருக்கும் என்றால் என்ன? பகுதியைப் பார்க்கவும்)

ரெபோ, எம்.எஸ்.எஃப். இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது ஒரு வங்கி முன்பு 7.25 சதவிகிதம் முதல் 10.25 சதவிகிதம் வரை ரிசர்வ் வங்கியிடமிருந்து வாங்கு குறுகிய கால தொகைக்கு வட்டி கொடுக்க வேண்டும். இப்போது 7.5 முதல் 9.5 சதவிகிதம் மட்டும் கொடுத்தாலே போதுமானது. இதனால் வங்கிகளின் வட்டி செலவு ஒட்டுமொத்தமாக குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், ரொக்கக் கையிருப்பு விகிதமான 4 சதவிகிதத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி செய்யவில்லை. ஆனாலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரொக்கக் கையிருப்பு விகிதத்தை தினமும் சரியாக வைத்திருக்க முடியாது என்பதால் 99%வரை சரியாக வைத்திருந்தால் போதும் என்ற விதி இருக்கிறது. இந்த விதியை இப்போது 95 சதவிகிதம் என்ற நிலையில் திருத்தி இருக்கிறது. இதனால் பண அளிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்து க்கொண்டு, அதே நேரத்தில் முதலீட்டுக்குத் தேவையான கடனை அளிக்க முடியும் என ரிசர்வ் வங்கி நினைக்கிறது.

பங்குச்சந்தை என்ன நினைத்தது?

ரகுராம்ராஜன் அறிவித்த கொள்கையை பங்குசந்தைகள் புரிந்துக்கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது. பணக்கொள்கை அறிவிக்கபட்ட சில நிமிஷங்களில் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன. ரெபோ விகிதம் அதிகரித்தவுடனேயே வங்களின் கடன் செலவு அதிகரிக்கும், இதனால் லாபம் குறையும் என பங்குச்சந்தை நினைக்கிறது. எக்காலத்திலும் ரெபோ விகித மாற்றங்கள் வங்கிகளின் கடன் செலவுகளில் மற்றும் லாபங்களில் பெரிய மாற்றங்களை உடனடியாக உருவாக்குவதில்லை.

மேலும் எம்.எஸ்.எஃப் மூலம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி 0.75 சதவிகிதம் குறைக்கபட்டுள்ளாது. இதன் மூலம் பெருமளவு தொகையை வங்கிகள் கடன் வாங்க முடியும். இதனால் வங்கிகளின் செலவு கணிசமாக குறையும். இதனை பங்குசந்தைகள் கணக்கில் எடுத்து க்கொள்ளாததுதான் சரிவுக்கான காரணம். அடுத்த சில நாட்களில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளில் ஒரு தெளிவு ஏற்படும் போதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் போதும், பணவீக்கம் கட்டுக்குள் வரும்போதும் பங்குச்சந்தை குறியீடுகள் உயரும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x