வியாபாரத் திட்டம் III - என்றால் என்ன?

வியாபாரத் திட்டம் III - என்றால் என்ன?
Updated on
1 min read

வியாபாரத் திட்டம் தயாரிப்பதற்கான முக்கிய நோக்கமே புதிய முதலீட்டிற்கான பணத்தைத் திரட்டுவதுதான். மூன்று பேர் நமக்கு முதலீடு செய்ய முன்வரக்கூடும், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள். ஒவ்வொருவரும், வியாபாரத் திட்டத்தை பார்க்கும் நோக்கமே வேறுவேறாக உள்ளது.

ஏஞ்சல், ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தும் தொழில்முனைவோரின் திறமையை அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருப்பார். நிறுனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், நிறுவனத்தின் மேலாண்மை அம்சங்களை அறிந்துகொள்வதில் வென்ச்சர் கேபிடல் நிறுவனம் முனைப்புடன் இருக்கும்.

நிறுவனத்தில் நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை அறிய வங்கிகள் ஆவலுடன் இருக்கும். எனவே, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபார அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

வங்கிகள், தாங்கள் கொடுக்கும் கடன் திரும்ப வருமா என்பதை உறுதி செய்ய முயல்வார்கள். எனவே, தொழில் முனைவோர் எவ்வித சொத்துகளை அடமானங்களை வைக்கின்றனர், நீண்ட காலத்திற்கு நிறுவனம் சந்தையில் தொடர்ந்து வியாபாரம் செய்யக்கூடிய தகுதியுடன் இருக்கிறதா, நிறுவனத்தின் தொழிலில் எவ்விதமான ரிஸ்க் உள்ளது, என்பதைத் தெரிந்துகொள்ள முயல்வார்கள்.

வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் நோக்கமே குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிப்பது. வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்யும் நிறுவனம் நஷ்டம் அடைந்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எனவே, நிறுவனத்தின் வளர்ச்சியையும், துரித லாபத்தையும் உறுதி செய்யும் மேலாண்மை திறன், சந்தை நிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள வென்ச்சர் கேபிடல் நிறுவனம் வியாபாரத் திட்டத்தில் உள்ள மேலாண்மை, சந்தை நிலை பற்றிய குறிப்புகளை ஆழ்ந்து அறிய முயற்சிக்கின்றனர்.

தொழில்முனைவோருடன் இணைந்து செயல்பட ஏஞ்சல் முயற்சிக்கின்றார். எனவே, தானும் தொழிலில் ஒரு பங்குதாரர் என்பதால், தொழிலின் எல்லா வகையிலும் பங்கேற்க தொழில்முனைவோரின் தன்மை அறிய வியாபாரத் திட்டத்தில் விபரங்களை தேடுகிறார். தனக்கும் தொழில்முனைவோருக்கும் உள்ள வியாபார தொடர்பு நீடித்து நிலைத்து நிற்க முயல்வதும், அதனை அறிய வியாபாரத் திட்டத்தில் தொழில்முனைவோரின் தன்மை பற்றிய செய்திகளைத் தேடுகிறார்.

எனவே, வியாபரத் திட்டம் தயாரிப்பது யாருக்காக என்பதை பொறுத்து அதன் உள்ளடக்கம் மாறுபடும் என்பதை புரிந்துகொண்டால் சிறந்த வியாபாரத் திட்டத்தை தயாரிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in