

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு 18 லட்சம் வங்கி கணக்குகளில் அதிக தொகை டெபாசிட் செய்யப்பட் டுள்ளது. இந்த வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இந்த தகவலை கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அதிகம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட் டுள்ளன. இந்த வங்கி கணக்கு களில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் அவர்களுடைய ஊதியத்துக்கும் பொருந்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ஜன் தன் வங்கி கணக்குகளும் செயல்படாத வங்கி கணக்குகளும் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிக தீவிரமாக இந்த வங்கி கணக்குகளை ஆராய்ந்து வருகிறோம். அதிலும் குறிப்பாக அதிக தொகை யார் டெபாசிட் செய்திருக்கிறார்களோ அவர்களது வங்கி விவரங்களை ஆராய்ந்து வருகிறோம்.
இதுபோல் ஆராய்ந்ததில் சுமார் 18 லட்சம் வங்கி கணக்குகளில் உரிமையாளரின் வருமானத்துக்கும் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு மிகவும் முரண்பாடாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அனைவரையும் நிதி சுழற்சிக்குள் கொண்டு வருவதுதான் இந்த அரசினுடைய முதன்மையான கொள்கை. அதிலும் குறிப்பாக பெண்களை நிதி சுழற்சிக்குள் கொண்டுவர இந்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் 2014-ம் ஆண்டு ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. ஜன் தன் யோஜனாவின் கீழ் சுமார் 51.5 சதவீத பெண்கள் வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நல்ல பலனை பெண்கள் அடைந்துள்ளனர். முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டும் அல்லாமல் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவினருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.