

சமையல் எரிவாயுவின் விலையை மாதந்தோறும் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 5 முதல் 10 வரை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிரீத் பாரிக் வல்லுநர் குழு அளித்த பரிந்துரையில் தற்போது மாதந்தோறும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 காசு உயர்த்தப்படுவதற்குப் பதிலாக ஒரு ரூபாய் உயர்த்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
டீசல், சமையல் எரிவாயுவுக்கு அரசு அளித்து வரும் மானியங்களினால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வரை இந்த நடவடிக்கை தொடரும் எனத் தெரிகிறது. எனினும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்றே அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பாக கிரீத் பாரிக் வல்லுநர் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த அரசு விரும்பாவிட்டாலும், மானிய சுமையை குறைக்கும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள விலையை உயர்த்துவதைத் தவிர வேறுவழியில்லை என்றும் கூறப்படுகிறது.
இரண்டு விதமான யோசனைகள்
இது தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு யோசனைகள் அமைச்சகத்தின் முன்வைக்கப்பட்டுள்ளன. மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசு டீசல் விலை உயர்வு என தற்போது நடைமுறையில் உள்ளதற்குப் பதிலாக இரு வாரங்களுக்கு ஒருமுறை 50 காசு உயர்வு அல்லது மாதந்தோறும் ரூ. 1 உயர்வு என்ற வகையில் விலை உயர்வை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. எண்ணெய் மானியத்துக்கு மட்டுமே ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசு செலவு செய்கிறது. இதன் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது" என்றார்.
ஆனால், விலை உயர்வு தொடர்பான தகவலை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். டீசல் விலையை பல மடங்கு அதிகரிக்கும் யோசனை எதுவும் இல்லையென்றும், தற்போதுள்ள மாதந்தோறும் விலையை உயர்த்தும் நடைமுறையே தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 11 நஷ்டம் ஏற்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 555 நஷ்டம் ஏற்படுகிறது.
விலை உயர்வால் பலனில்லை
மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைத்தது, டீசல் விலையை மாதந்தோறும் 50 காசு உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்படும் இழப்பு இந்த ஆண்டு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு போன்ற காரணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதிக அளவில் எரிபொருளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை வகிக்கிறது.
எரிபொருள் தேவையில் 40 சதவீதத்துக்கும் மேலாக டீசல் பயன்படுத்தப்படுகிறது. ரூ.17,772 கோடி மானியம் இதற்கிடையே கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டுக்கான மானியத் தொகை ரூ. 17,772 கோடியை இந்திய ஆயில் கார்ப்பரேஷன் ஐ.ஓ.சி.) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஓ.சி. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் ரூ. 8,772 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை அனுப்பப்பட்ட மற்றொரு கடிதத்தில் மேலும் ரூ. 9,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.