

வாராக் கடனை கையாள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனியான ஒரு நிறுவனத்தை தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசும் தீவிரமாக பரிசீலித்து எஸ்பிஐ-க்கு ஆலோசனை வழங்க உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
மும்பையில் கிரிசில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிறுவன கடன் பத்திர சந்தை தொடர்பான கருத்தரங்கில் நேற்று பங்கேற்று பேசிய சின்ஹா மேலும் கூறியது:
வங்கிகளின் வாராக் கடன் சொத்துகளைக் கையாள தனி நிறுவனத்தை உருவாக்கு வதற்கான விதிமுறைகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன. இதை எஸ்பிஐ நிர்வகிக்கும். வங்கிகளின் வாராக் கடன் சொத்துகளின் மதிப்பு ரூ. 8 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாராக் கடன் சொத்துகளைக் கையாள்வதற்கு புதிய நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. கடன்களை திரும்பப் பெறுவதற்கு மிகவும் வலுவான வழிமுறைகள் தேவை. எவ்வளவு தொகை நிதியத்துக்கு ஒதுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தொகை கணிசமான அளவுக்கு இருக்கும் என்றார் சின்ஹா.
சர்வதேச அளவில் பிரபல மாக உள்ள பிரைவேட் ஈக்விடி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் நிறுவனம் மற்றும் மேற்கு ஆசியா வைச் சேர்ந்த இரண்டு சொத்து நிர்வாக நிதி நிறுவனங்களுடன் இணைந்து 300 கோடி டாலர் அளவுக்கு வாராக் கடன் நிர் வாக நிதியத்தை எஸ்பிஐ உருவாக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாராக் கடன் சொத்துகளை நிர்வகிக்க (வசூலிக்க) சொத்து மீட்பு நிறுவனத்துக்கு (ஏஆர்சி) மாற்றாக ``பேட் பேங்க்’’ எனும் தனி நிறுவனத்தைத் தொடங்கு வதற்கான சிந்தனை கடந்த ஆண்டில் உருவானது. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் பெரும் கடன் வைத்துள்ளவர்களிடமிருந்து எப்படி திறமையாக கடனை வசூலிப்பது என கவர்னர் ரகுராம் ராஜன் கேள்வியெழுப்பியிருந்தார்.
புதிய நிறுவனத்தில் வங்கிகளின் பங்கு முற்றிலும் இருக்காது. இது தனிப்பட்ட முறையில் செயல்படும் என்று சின்ஹா தெரிவித்தார்.