

ரிலையன்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்த திருபாய் அம்பானி சிறு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர், மேலும் இந்தியாவில் சிறுமுதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான கலாசாரத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் ரிலையன்ஸ் குழும(அனில் மற்றும் முகேஷ் இரண்டு நிறுவனங்களிலும்) நிறுவனங்களில் இருந்து 16 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
இதில் அதிகபட்சமாக அனில் அம்பானி குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து 5.55 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து 4.78 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இருந்து 3.10 லட்சம் சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
ரிலையன்ஸ் குழுமத்தில் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களில் இருந்து சிறு முதலீட்டாளர்கள் வெளியேறி வருகிறார்கள். இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ்., ஐடியா செல்லூலார், சுஸ்லான் எனர்ஜி மற்றும் கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்தும் சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
பி.எஸ்.இ. 500 பிரிவில் இருக்கும் பங்குகளில் 300க்கும் மேற்பட்ட பங்குகளில் இருந்து கணிசமான சிறுமுதலீட்டாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியேறி இருக்கிறார்கள். இதில் 120க்கும் மேற்பட்ட பங்குகளில் சிறுமுதலீட்டாளர்களின் பங்கு 10 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்திருக்கிறது.
பங்குகளின் லாபம் குறைந்தது, முறையற்ற நிர்வாகம் போன்ற காரணங்களால் சிறுமுதலீட்டாளர்கள் வெளியேறி இருப்பதாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீடுகளுக்கு வித்தியாசம் தெரியாமல் இருப்பதாக இண்டகரேட்டட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கிருஷ்ணன் தெரிவித்தார். ஆலோசகர் சிறுமுதலீட்டாளர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றார்.