

கட்டுமான நிறுவனமான டிஎல்எப் நிறுவனப் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 8 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. இதனால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,674 கோடி அளவுக்கு சரிந்தது. ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தப்படக் கூடும் என்ற அச்சமே பங்குச் சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
வர்த்தகத்தின் முடிவில் 7.84 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 110.50 என்ற விலையில் வர்த்தகமானது. ஒரு கட்டத்தில் இந்நிறுவன பங்கு 9 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 109.10 என்ற விலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையில் 8.30 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 110 என்ற விலைக்கு இது வர்த்தகமானது. நிறுவன பங்கு விலைகள் கடும் சரிவைச் சந்தித்ததால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,674 கோடி அளவுக்குச் சரிந்து ரூ. 19,690.30 கோடி என்ற நிலையை எட்டியது.
இம்மாதத் தொடக்கத்தில் டிஎல்எப் நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட 6 பேர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 3 ஆண்டுளுக்கு செபி தடை விதித்தது. அன்றைய தினம் இந்நிறுவனப் பங்குகள் 28 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்தன. இதை எதிர்த்து டிஎல்எப் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.
தீர்ப்பாயத்தின் முன்பான இந்த வழக்கு அக்டோபர் மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் விலை படிப்படியாக முன்னேறியது. இந்நிலையில் ஹரியாணா மாநில அரசு இந்நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தும் என்ற தகவல் வெளியானதால் பங்கு விலைகள் கடுமையாகச் சரிந்தன.
பாஜக அமைச்சர்களாக பொறுப்பேற்ற உடனேயே நிலம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா அல்லது சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஆகிய எவராயிருப்பினும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலத்தில் பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கியுள்ள டிஎல்எப் நிறுவனம் தலைநகர் டெல்லியை அடுத்த குர்காவ்னில் மிகப் பெரிய டவுன்ஷிப்பை உருவாக்கியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதே பாஜக வேட்பாளர்கள் முந்தைய அரசின் செயல்பாடு, ராபர்ட் வதேராவுக்கு நிலம் வழங்கப்பட்ட விவகாரத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ராபர்ட் வதேராவுக்கும் டிஎல்எப் நிறுவனத்துக்கும் நிலம் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஹரியாணா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியும் இம்மாநிலத்தில் நடைபெற்ற நில விவகாரம் தொடர்பாக கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில் புதிய பாஜக அமைச்சர்களின் கருத்தால் டிஎல்எப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
ராணுவ உதிரிபாக தயாரிப்பு நிறுவன பங்கு விலை உயர்வுஇதனிடையே ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் 5 சதவீத அளவுக்கு உயர்ந்தன. ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு அரசு ஒப்புதல் அளித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
பிஇஎம்எல் நிறுவன பங்கு விலை 4.98 சதவீதமும், அஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவன பங்கு விலை 2.33 சதவீதமும், பிஇஎல் பங்கு 0.39 சதவீதமும் உயர்ந்தன. 6 நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்கவும், 8,000 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்கவும், 12 நவீன டோர்னியர் கண்காணிப்பு விமானங்களை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 6 நீர்மூழ்கி கப்பல் கட்டுவதற்கான ரூ. 50 ஆயிரம் கோடி செலவாகும்.
98 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவு காணப்பட்டது. 98 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 26752 புள்ளிகளானது. தொடர்ந்து 6 நாள்களாக ஏற்றம் கண்டுவந்த பங்குச் சந்தை இப்போது சரிவைச் சந்தித்தது.
ஹெச்யுஎல், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் 23 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 7991 புள்ளிகளானது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நிதிக் கொள்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது. இதுவும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.