இந்தியாவில் மின் தட்டுப்பாட்டால் ரூ.4 லட்சம் கோடி இழப்பு

இந்தியாவில் மின் தட்டுப்பாட்டால் ரூ.4 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

இந்தியாவில் நிலவும் மின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரூ. 4,14,800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மின் நுகர்வுக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு காரணமாக ஜிடிபி-யில் 0.4 சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் வர்த்தக சம்மேளன கூட்டமைப்பின் (ஃபிக்கி) மின் விநியோக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தில் நிலவிய சில குறைபாடுகள் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து எதிர்காலத்தில் திட்டமிட்டாலும், மின் விநியோகத்தில் உள்ள இடர்பாடுகளைக் களைந்தாக வேண்டியது மிகவும் கட்டாயமாகும்.

மேலும், இந்தியாவில் மின் விநியோகத்தில் முதலீடு செய்வது வெகுவாகக் குறைந்துள்ளது. பொதுவாக மின்னுற்பத்தியில் 50 சதவீத முதலீடு செய்யப்பட்டால் மின் விநியோகத்திலும் 50 சதவீத அளவுக்கு முதலீடுகள் இருக்கும். ஆனால் இந்தியாவில் மின் விநியோகத்தில் முதலீடு 30 சதவீத அளவுக்கே உள்ளது.

பொதுவாக மின் விநியோகத்தில் அதிக அளவு இழப்பீடு இருப்பதால் இத்துறையில் முதலீடுகள் குறைந்துள்ளன. இந்தியாவில் மின் விநியோக இழப்பு 26 சதவீத அளவுக்கு உள்ளது. ஆனால் சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட அளவு வெறும் 9 சதவீதமாகும்.

மேலும் மின்சாரத்தை உபரியாக உற்பத்தி செய்யும் பகுதியிலிருந்து பற்றாக்குறை பகுதிக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

இத்துறையில் எதிர்காலத்தில் 7,500 கோடி டாலர் (சுமார் 6 லட்சம் கோடி) அளவுக்கு முதலீடு தேவைப்படுகிறது. மின் விநியோகத் துறையில் மட்டும் 3,500 கோடி டாலர் அளவுக்கு முதலீடு தேவைப்படுகிறது. இதில் 1,900 கோடி டாலர் பவர் கிரிட் கார்ப்பரேஷன் முதலீடு செய்கிறது. எஞ்சிய தொகைதனியார் பங்களிப்பில் நிறைவேற்றப்பட உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in