

என்.ஆர்.ஐ-களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சென்ற வாரம் பார்த்தோம். பொதுவாக என்.ஆர்.ஐ என்பவர் யார்? என்.ஆர்.ஐ என்பவர் வெளிநாடுவாழ் இந்தியர் அல்லது பி.ஐ.ஓ (PIO – Persons of Indian Origin) என்று சொல்லக்கூடிய இந்தியா வம்சா வழியினர் ஆவார்.
இந்திய குடிமகன் ஒருவர் வெளிநாட்டில் வாழும்பொழுது அவரை என்.ஆர்.ஐ என்று அழைக்கின்றோம். அதே சமயத்தில் பல காலங்கள் முன்பு வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியரும் அவர்களின் வம்சா வழியினரும் என்.ஆர்.ஐ என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.
பி.ஐ.ஓ
இந்திய வம்சா வழியினர் என்பவர் யார்? ஃபெமா (FEMA - Foreign Exchange Management Act) விதிகளின்படி இந்திய வம்சா வழியினர் என்பவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டைத் தவிர வேறு எந்த நாடுகளின் குடிமகனாகவும் இருக்கலாம். ஆனால் அவரோ அல்லது அவரின் பெற்றோரில் எவராவது ஒருவரோ இந்தியக் குடிமகனாக இருந்திருக்க வேண்டும். அல்லது அவரின் மூதாதையர் இந்திய குடியினராக இருந்திருக்க வேண்டும். இவற்றிற்குள் வராவிட்டால் ஒருவரின் வாழ்க்கைத் துணை இந்தியக் குடியினராக இருக்க வேண்டும்.
நெருங்கிய உறவினர் யார்?
இதற்கு முன்பு நமது கட்டுரைகளில் நெருங்கிய உறவினர் என பலதடவை குறிப்பிட்டுள்ளோம். இப்பொழுது நெருங்கிய உறவினர் யார் என்ற கேள்வியும் எழும். இதற்கு பதில் கம்பெனி சட்டம் 1956-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக 22 வகையான உறவுகளை இந்தியச் சட்டம் உறவினர் என ஏற்றுக் கொள்கிறது. அவ்வகையான உறவினர்களில் அப்பா, அம்மா, மகன், மகள், மருமகன், மருமகள், தாத்தா, பாட்டி, பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைகள் சகோதரன்/ சகோதரி மற்றும் அவர்களின் வாழ்க்கைத்துணைகள் அடங்குவர்.
அதேபோல் ஸ்டெப் மதர், ஸ்டெப் மகன்/ மகள், ஸ்டெப் சகோதரன்/ சகோதரி போன்றவரும் உறவினர்களில் அடங்குவர். இதுபோன்ற நெருங்கிய உறவினர்களுடன் என்.ஆர்.ஐ-க்கள் வரவு செலவு செய்வதற்கு, இந்தியச் சட்டம் நாம் இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்தது போல், சிறப்புச் சலுகைகளை அளிக்கிறது.
ரியல் எஸ்டேட் முதலீடு
பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியைக் கண்டு, இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளார்கள். வெளிநாடு வாழ் இந்தியர், பி.ஐ.ஓ மற்றும் இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர் இந்தியாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். அவ்வகையான முதலீட்டாளர் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும் பொழுது இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறுவது அவசியமாகும்.
இவ்வகையான ரியல் எஸ்டேட் முதலீடுகள் விவசாய நிலங்களில்/ தோப்புகளில்/ எஸ்டேட்டுகளில், பண்ணை வீடுகளில் இருத்தல் கூடாது. இங்கு குறிப்பிடத்தக்கது ஒருவர் இந்திய குடிமகனாக இருந்த பொழுதும், அவர் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால் விவசாயம் சம்மந்தப்பட்ட அசையா சொத்துகளை வாங்க முடியாது என்பது தான்.
இவ்வகையான முதலீடுகளைச் செய்யும் பொழுது ஒருவர் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த பணத்தின் மூலமாகவோ அல்லது உள்நாட்டில் அவர்களின் என்.ஆர்.ஓ கணக்குகளில் உள்ள பணத்தின் மூலமாகவோ சொத்துகளை வாங்கிக்கொள்ளலாம். டிராவலர்ஸ் செக் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு கரன்ஸி மூலமாகவோ ரியல் எஸ்டேட் சொத்துகளை வாங்க முடியாது.
அசையா சொத்துகளுக்கு உண்டான வேறு சில திட்டங்களைப் பற்றியும் காண்போம். என்.ஆர்.ஐ ஒருவருக்கு, இந்தியாவில் இருக்கும் நபரோ அல்லது வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனோ/ பி.ஐ.ஓ-வோ அசையா சொத்தை அன்பளிப்பாக கொடுக்கலாம் - நாம் மேலே குறிப்பிட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு!
அதேபோல் என்.ஆர்.ஐ ஒருவர் தனக்கு மரபுரிமை (inheritance) மூலமாகவும் சொத்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்.ஆர்.ஐ ஒருவர் தனக்கு இந்தியாவில் உள்ள அசையா சொத்துகளை இந்தியாவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கலாம்.
அதேபோல் என்.ஆர்.ஐ, வெளிநாட்டில் வாழும் மற்றொரு இந்தியருக்கோ அல்லது பி.ஐ.ஓ-விற்கோ விவசாய நிலங்களை தவிர்த்து மாற்றிக் கொடுக்கலாம்.
வரும் வாரத்தில் ரியல் எஸ்டேட்டை விற்று வெளிநாட்டிற்கு பணத்தை எடுத்துச் செல்லும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பார்போம்.
சொக்கலிங்கம் பழனியப்பன் - prakala@gmail.com