

மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசிடமிருந்து இனி மிகப் பெரிய அளவிலான பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்பார்க்க முடியாது என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் சர்வதேச பிரிவுக்கான உத்திகள் வகுக்கும் பிரிவின் தலைவர் ருசிர் சர்மா தெரிவித்துள்ளார்.
புதிய அரசு பதவி ஏற்ற இரண்டு ஆண்டுக் காலத்திற்குள்தான் பெரிய அளவில் கொள்கை மாற்றங்கள் குறித்த முடிவுகளை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் மோடி அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மீண்டும் எப்படி பதவியைத் தக்க வைத்துக் கொள்வது என்பதில்தான் அவர்களது காலம் கழியுமே தவிர, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக பெரும்பாலான நாடுகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் பதவியேற்ற ஓராண்டுக்குள் மேற்கொள்ளப்பட்டுவிடும். ஆனால் இந்தியாவில் இரண்டு ஆண்டுக் காலத்தில் மேற்கொள்ளப்படலாம் என்ற நிலை உள்ளது.
நீண்ட காலமாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மீண்டும் அதைத் தக்கவைத்துக் கொள்ளவே விரும்புவார். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. அடுத்து மீண்டும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் நீடிப்பது எப்படி என்பதில்தான் அவர்களது கவனம் முழுக்க செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு தான் மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை சான்றாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2014-ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு மத்தியில் பதவியேற்றதிலிருந்து ஓராண்டு வரை அதாவது டெல்லி தேர்தல் நடைபெறும் வரை எதிர்க்கட்சி கிடையாது. இந்த காலகட்டத்தில் அரசு என்ன நினைத்ததோ அதை செயல்படுத்தியது. டெல்லி தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி வலுப்பெற்றுவிட்டது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியின் பாஜகவுக்கு மூன்று இடங்களே கிடைத்தன.
பொதுவாக முதல் ஆண்டில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மட்டுமே தொடரும். அதிகபட்சம் இரண்டாம் ஆண்டு வரை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இனி பெரிய சீர்திருத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுவதாக சர்மா குறிப்பிட்டார்.
தனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக பங்குச் சந்தை நிலவரத்தைக் குறிப்பிட்ட அவர், புதிய அரசின் முதல் இரண்டு ஆண்டுகளில்தான் பங்குச் சந்தையின் அதிகபட்ச ஏற்றம் (90%) இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை என்றாலும், அந்நிய நேரடி முதலீடுகளுக்கான (எப்டிஐ) விதிமுறைகள் தளர்த்தப்படலாம். அதேபோல வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம். ஒருவேளை அதிர்ஷ்டமிருந்தால் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமலாகலாம் என்று குறிப்பிட்டார்.
வங்கிகள் தனியார்மயமாதல் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் அனைத்துமே முதல் இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் சுட்டிக் காட்டினார்.
ஒருவேளை இரண்டாவது முறையாக இதே அரசு தேர்ந்தெடுக்கப்பட்டால், முன்பிருந்த அதே அளவு உற்சாகத்துடன் முதல் இரண்டு ஆண்டுகளில் அந்த அரசு செயல்படாது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள்தான் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதுகிறீர்களா? என கேட்டதற்கு. இது தப்பிப்பதற்கு கூறும் ஒரு காரணமே என்று குறிப்பிட்ட அவர், சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்கம் மற்றும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது எந்தவித மத்திய அரசு சார்ந்த பிரச்சினையும் பிரதானமாக இல்லை என்பதை சுட்டிக் காட்டினார்.