Last Updated : 19 May, 2017 10:34 AM

 

Published : 19 May 2017 10:34 AM
Last Updated : 19 May 2017 10:34 AM

வணிக நூலகம்: எண்ணத்தில் தெளிவு, முடிவுகளில் மேன்மை

முட்டாள் தனமான செயல்களை செய்வதற்கு யாரும் விரும்புவதில்லை. ஆனால் நாம் செய்துகொண்டே இருக்கிறோம். முடிவுகளை எடுக்கும்போது வேகமாக உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே எவ்வளவு வேகமாக மெய்பாடுகள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றோம்.

வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத போதும் ஒரு செயலை இலக்கை நோக்கி நகர்த்திக் கொண்டே இருத்தலும், கடின உழைப்பில் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருத்தலும், சிலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் ஆகும். உங்களுக்கு இது போன்று ஏதேனும் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஆம் எனில் உங்கள் முயற்சிகளை நியாயப்படுத்தும் பணியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பெருவாரியான வாடிக்கையாளர்கள் உங்களுடைய நிறுவனத்தின் பொருளை வாங்குகிறார்களா? அல்லது வாங்கியதில் திருப்தி அடைந்தார்களா? என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலை கேட்டு நீங்கள் திக்கு முக்காடி போகிறீர்களா?. ஒரு சிலர் மட்டுமே குறைகளை கூவிக் கொண்டிருந்தார்களே ஆனால் அவர்களை புறம்தள்ளி மற்றதை நினைத்து மகிழ்ச்சியில் மிதக்கிறீர்கள் என்றால், மாயையில் நீங்கள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கும் பொழுது தன்னுணர்வு இல்லாத நிலையில் எண்ணங்களின் குளறுபடியில் செயல்படுவதாக ரோல்ஃப் டோவ்லி (ROLF DOVELLI) என்னும் நூலாசிரியர் தெளிவாக சிந்திக்கும் கலை ( THE ART OF THINKING CLEARLY ) என்ற புத்தகத்தில் கிட்டத்தட்ட 400 பக்கங்களில் வெகு அழகாக கோலம் வரைந்து காட்டுகிறார். நடத்தை சார்ந்த பொருளியல், உளவியல், நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகள் சிறிய நிகழ்வுகள் மற்றும் கதைகள் மூலமாக எங்கு எப்படி நம்முடைய எண்ண ஓட்டங்களில் தவறாக பயணம் செய்கின்றோம் என்றும் அதிலிருந்து விலகி வெளிவருவது குறித்தும் விரிவாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிக தேவைகளுக்கும், விருப்பங்களுக் கும் இடம் கொடுக்கும் பொழுது செயல், நம்பிக்கை, எண்ணம் ஆகியவைகளில் குழப்பங்களை வளர்த்து தெளிவை தவற விடுகின்றோம். அவ்வாறு செயல்பட்டு முடிவுகளை மேற்கொள்ளும் போது அடையும் தற்காலிக வெற்றிகள் சிறிது காலம் சென்று எதிர்மறை மாற்றங்களாகவும் திடீர் என்று மாறிய சூழ்நிலைகளாகவும் தோன்றுகின்றன.

சிறுதுளி பெருவெள்ளம்

இவைகளை புறம் தள்ளி முன்னேறும் பொழுது, பகுத்தறிவை வெகு வேகமாக இழந்து கொண்டு இருக்கின்றோம். பேதங்களை எதிர்கொள்ளும் பொழுது பறவைகள் துப்பாக்கி குண்டுக்கு பறந்து ஓடுவதை போல வேகமாக குதித்து தத்தி தாவி ஓடுகிறோம். நம்மிடம் இருக்கக் கூடிய மிகப்பெரிய குறைபாடு அல்லது பலவீனம் என்னவென்றால் நாம் சிறிய அல்லது படிப்படியான மாற்றங்களை நுணுகிப் பார்க்க தவறிவிடுகின்றோம். மந்திர வித்தை காட்டுபவர் கையில் இருக்கும் கடிகாரத்தை நாம் அறியாமல் எவ்வாறு எடுக்க முடியும்?. நம்முடைய உடலில் ஏதோ ஒரு பகுதியில் அதிக அழுத்தத்தை கொடுத்து கைக்கடிகாரம் இருக்கும் பகுதியில் குறைந்த அழுத்தத்தில் அதை கழட்டிவிடும் பொழுது சிறிய படிப்படியான தொடு உணர்வை நாம் உணர்ந்து கொள்வது இல்லை. அதே போன்று நம்மிடம் இருக்கும் பணம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே செல்லும் போது நாம் அதை இழப்பதை போல உணருவது இல்லை.

எண்ணம் நிலையல்ல

பணவீக்கம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பது. சில காலத்திற்கு பிறகு கையில் இருக்கும் பணம் இழக்கும் மதிப்பை மொத்தமாக பார்க்கும் பொழுது தலை சுற்றுகிறது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதே போன்று தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் சில நாட்கள் கழித்து வாங்கலாம் என்று வாங்கும் முடிவை ஒத்திவைப்பார்களே ஆனால். ஒரு நிலையில் தங்கத்தின் விலை திடீர் என்று குறிப்பிட்ட அளவிற்கு மேல் விற்பதாக உணருகிறோம். இதைத்தான் முயற்சிகளை நியாயப்படுத்தும் பாங்காக நூலாசிரியர் கூறுகிறார். அதே போன்று அதிகபட்ச வரிவிதிப்புகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாமல் காலப் போக்கில் பண்பட்டு பழக்கப்பட்டு ஏற்றுகொள்ளப்படுகிறது. மோட்டார் வாகனங்களின் எரிபொருள்களின் விலை உயர்த்தப்படும் போது ஓரிரு நாளில் இருக்கக்கூடிய தாக்கம் அதன் பின் எங்கு மறைந்து போனது என்று நாமே வியக்கிறோம். பணத்தை இழப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஆனால் பணம் நம்மை விட்டு போய் கொண்டே இருக்கிறது.

மாறுபாடுகளும் வேறுபாடுகளும்

முட்டாள் தனமான செயல்களை செய்வதற்கு யாரும் விரும்புவதில்லை. ஆனால் நாம் செய்துகொண்டே இருக்கிறோம். முடிவுகளை எடுக்கும்போது வேகமாக உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டே எவ்வளவு வேகமாக மெய்பாடுகள் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றோம். மூளை எந்த அளவிற்கு தெளிவான புரிதலோடு செயலாற்றுகிறது என்பதனையும், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் உண்மையின் புரிதலும் எந்த அளவிற்கு நம்மை மாற்றுகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள கதைகள் எவ்வளவு முட்டாள்தனமான முடிவுகளை நாம் மேற்கொள்கின்றோம் என்பதை நமக்கு புரிய வைத்து அதிர்ச்சியை அள்ளித்தருகிறது.

மனித நிகழ்வுகளில் எந்த அளவிற்கு நாம் குறைகளை பெரிதுபடுத்தி நிறைகளைத் தொலைத்து சாடிக்கொண்டே இருக்கின்றோம் என்பதும் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. செய்வன திருந்த செய்தலும் மிடுக்கான முடிவுகளும் வெற்றியை வசப்படுத்தும் பாங்கும் நம் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. ஆனால் இவை மட்டுமே எண்ணங்களையும் செயல்களையும் சிறக்கச் செய்யாது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு பிரச்சினையையும் எந்த அளவிற்கு சிக்கலாக்குகிறோம் என்பதை எளிதில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

எப்போதும் சிறந்ததை செய்வேன் சிறப்புகளை மட்டுமே தேடுவேன் என்று இருந்தால் ஏமாறும் ஒரு நொடியும் தடுமாறும் ஒரு நொடியும் தவறும் ஒரு நொடியும் நாம் பெரும் பள்ளத்தில் விழுந்துவிட்டதாக நம்மை நம்ப வைக்கும். அவைகளை புறம் தள்ளி எல்லா நேரங்களில் எல்லா தரவுகளை தேடி எடுத்து அறிவுசார் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தாகத்திற்கு தடைபோட வேண்டும். சிறிதளவே தரவுகள் இருந்தாலும் சிறிதளவே உண்மையாக இருந்தாலும் அவைகளை நுணுகிப்பார்த்து அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படுவது சிறந்தது.

செய்வன திருந்த செய்

உறையும் பனியில் முன்னேற்பாடு இல்லாமல் வெளியில் திரியும் யாரும் தெளிவாக இருப்பதாக அறியமுடியாது மேலும் கிடைத்த தரவுகளும் அறிந்த உண்மைகளும் நம்முடைய திறந்த மனதோடு எடுக்கப்படும் முடிவுகளும் நிச்சயம் மற்றவைகளை காட்டிலும் நல்லவைகளாகவே இருக்கும். அவ்வாறு எடுக்கும் முடிவுகள் நமக்கு மன வலிமையை கூட்டும். மாறாக பள்ளத்தில் விழுந்துவிட்டோம் என்று எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பவர்கள் வெளிச்சத்தை பார்க்க மறந்தவர்கள் ஆகின்றார்கள்.

கண்டுபிடிப்புகளுக்கு எதிரி அறியாமை அல்ல. அறிவு மயக்கம் அல்லது மாயையை ஏற்படுத்தும் அறிவு கூறுகளாகும். அடுத்த முறை எதிரியை எதிர் கொள்ளும் பொழுது கருணையைக் காட்டாமல் தரவுகளையும், ஆய்வுகளையும் சேர்த்து தெளித்தால் நம்முடைய எண்ணங்களில் இருக்கக் கூடிய மாறுபாடுகளை உணர்ந்து எதிரில் இருப்பவர்கள் ஓடிவிடுவார். ஒரு செயலை பதினாறாக பகிர்த்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் கேள்விகளாக கேட்டு, தகவல்களை பதிவு செய்தல் புத்திசார் மாயை ஆகும். மாறாக, அனைத்து கேள்விகளுக்கும் துணை கேள்விகளோடு விடைகளை கேள்விகளுக்கு முன்னதாகவே தயாரித்து வைத்திருந்தால் நாம் முயற்சிகளை நியாயப்படுத்தமாட்டோம் தேவையானவைகளை மட்டும் தேர்ந்தெடுக்கும் தவறுகளையும் செய்ய மாட்டோம். தெளிவாக சிந்திப்போம்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x