

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஆதரவு திரட்டியுள்ளது அமேசான் டாட் காம் நிறுவனம்.
ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்வதில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் இந்தியாவில் தடம் பதிப்பதற்காக அமெரிக்க எம்.பி.க்களின் ஆதரவை நாடியுள்ளது.
ஏற்கெனவே இதுபோன்று வால்மார்ட் நிறுவனம் ஆதரவு திரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமேசான் நிறுவனமும் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அமேசான் டாட் காம் மற்றும் அந்நிறுவனத்தைச் சார்ந்த பிற நிறுவனங்களான அமேசான் கார்ப்பரேட் எல்எல்சி ஆகியன 2000-வது ஆண்டிலிருந்து பல்வேறு நிலைகளில் ஆதரவு திரட்டியுள்ளதாக தெரிவித் துள்ளது.
இந்த விஷயம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் நிறு வனம் வெளியிட்ட நிதி நிலை அறிக்கையின் போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை ஜன. 22, 2014-ல் அமேசான் நிறுவனம் வெளியிட் டுள்ளது. அதில் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு தொடர் பாக செலவழித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் அமேசான் நிறுவனம் 9.60 லட்சம் டாலர் (ரூ. 6 கோடி) செலவிட்டுள்ளது. இதில் தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்துக்கான செலவுகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள், அமெரிக்க வர்த்தக அமைச்சகம், அமெரிக்க வெளியுறவுத்துறை, அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஆகியவற்றில் ஆதரவு திரட்டியுள்ளது.
2013-ம் ஆண்டில் அமேசான் நிறுவனம் 34.50 லட்சம் டாலரை ஆதரவு திரட்டுவதற்காக செலவிட் டுள்ளது. இவ்விதம் ஆதரவு திரட்டுவதற்காக செலவிட்ட தொகை 2000-வது ஆண்டி லிருந்து படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக செனட் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இந்நிறுவனம் ஆதரவு திரட்டுவதற்காக செலவிட்ட தொகை 2.15 கோடி டாலராகும் அதாவது ரூ. 135 கோடியை இந்நிறுவனம் செலவிட்டுள்ளது.
2012-ம் ஆண்டு வால்மார்ட் நிறுவனம் இவ்விதம் ஆதரவு திரட்டிய விவகாரம் இந்திய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
அமெரிக்காவில் இதுபோல் ஆதரவு திரட்டுவது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.