

ரயில்வேத் துறையில் ஏற்படும் இரும்புக் கழிவுகளை ஏலம் விடுவதற்கு மின்னணு முறையை பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏலம் எடுப்பவர்கள் ஏலம் விடும் இடத்திற்கு வருவது, பொருளைப் பார்வையிடுவது, ஏலம் கேட்பது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க முடியும். மேலும், ஏல நடைமுறையில் ஏற்படும் தில்லு, முல்லுகளைத் தவிர்க்கவும் மின்னணு ஏல முறையைப் பின்பற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் ரூ.3,500 கோடி மதிப்பிலான இரும்புக் கழிவுகள் ஏலம் விடப்படுகின்றன. ஆனால் அவை வழக்கமான ஏல நடைமுறைப்படி ஏலம் விடப்படுகின்றன.
மின்னணு ஏல முறைக்குத் தேவையான சாஃப்ட்வேரை ரயில்வேத்துறையே வடிவமைத்துள்ளது. டிஜிட்டல் சான்றிதழ் மூலம் ஏலதாரர்கள் மின்னணு ஏல முறையில் பங்கேற்கலாம். ஏலத்தில் பங்கேற்பவர்கள் தங்களது பெயரை ஒருமுறை மின்னணு முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது. பின்னர் தொடர்ந்து அவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியும். இணையதள முகவரி: www.ireps.gov.in
இணையதளம் மூலமான ஏல நடைமுறை மூலம் பண பரிவர்த்தனை முற்றிலுமாக மின்னணு முறையிலேயே நடைபெறும். இது ரயில்வேத் துறைக்கும், ஏலதாரருக்கும் பலனளிக்கும்.
முற்றிலும் வெளிப்படைத் தன்மையோடு மின்னணு முறையிலான ஏலம் நடைபெறுவதால் இடைத்தரகர் தவிர்க்கப்படுவர். எந்தப் பகுதியில் உள்ள கழிவுகளையும் மின்னணு முறையில் மற்றொரு இடத்திலிருப்பவர் ஏலம் எடுக்க முடியும்.
இந்த நடைமுறையில் இதுவரை 1,200 ஏலதாரர்கள் பதிவு செய்து இதுவரை ரூ. 1,000 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.