வியாபார மேலாண்மை எனும் அறிவியல் - என்றால் என்ன?

வியாபார மேலாண்மை எனும் அறிவியல் - என்றால் என்ன?
Updated on
1 min read

வியாபார மேலாண்மை என்பது அறிவியலா அல்லது கலையா என்ற விவாதம் எப்போதும் இருந்துவந்துள்ளது. அறிவியல் என்றாலே ஒரு பொருளின் எல்லாத் தகவல்களையும் சரியான அறிவுக் கருவிகள் கொண்டு ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது. மேலாண்மையை ஓர் அறிவியல் என்று எடுத்துக்கொண்டால், மேலாண்மையாளர் பெறபட்ட தரவுகளை, தான் கற்ற அறிவுக் கருவிகள் கொண்டு ஆராய்ந்து முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துவார். எனவே, அவருக்கு கற்பிக்கப்பட்ட அல்லது கற்றுக்கொண்ட ஓர் அறிவு பின்புலத்தில்தான் மேலாண்மை முடிவுகளை எடுக்கிறார்.

மேலாண்மையை அறிவியல் என்று ஒப்புக்கொள்பவர்கள் அனைவரும், வியாபாரத்தில் ஏற்படும் ஒவ்வொரு சூழலுக்கும் ஓர் அணுகுமுறை இருக்கிறது என்று நம்புகிறார்கள். வியாபாரப் பிரச்சினைகள் ஏற்படும்போதெல்லாம், மேலாண்மை அறிவியலில் இதனை எவ்வித விருப்பு வெறுப்பும் அல்லாது, நடுநிலையோடு அணுகக்கூடிய முறை உள்ளது என்று நினைக்கின்றனர். எனவே ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற ஒரு மேலாண்மைக் கோட்பாட்டை எடுத்து அதன்படி சூழ்நிலையை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கின்றனர்.

ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டுமெனில், தொழிலாளர் உற்பத்தி திறனை மேம்படுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் என்ன கூறுகின்றன, குறிப்பிட்ட சூழலுக்கு தேவைப்படும் நடவடிக்கைகள் என்ன என்று தேர்ந்தெடுத்து செயல்படுத்துவார். இதனால், அந்தக் குறிப்பிட்ட சூழலின் தனித்துவமான காரணிகளை, (சமூக, அரசியல்) அவர் கவனிக்காமல் போகலாம்.

மேலாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பலர், மேலாண்மை ஓர் அறிவியல் என்றே எண்ணி ஆராய்ச்சிகளை செய்துவந்தனர். Frederick W.Taylor, Frank மற்றும் Lillian Gilbreth போன்றவர்கள் இந்த சிந்தனையில் பிரசித்தமானவர்கள். இவர்களுடைய பார்வையில், ஒவ்வொரு மேலாண்மை செயலுக்கும் ஒரே ஒரு சிறந்த வழி உண்டு, அதனைக் கண்டறிவதுதான் மேலாண்மை அறிவியலின் நோக்கம். தொழிலாளர்களின் மனப்போக்கை அறிந்து, அவர்களின் செயல்பாட்டை மாற்றி நிறுவனத்தின் திறனை அதிகப்படுத்துவதே முக்கியம் என மேலாண்மை அறிவியல் கருதுகிறது.

உதாரணமாக, Frederick W.Taylor நான்கு மேலாண்மை அறிவியல் கோட்பாடுகளை கூறுகிறார். ஒன்று, தொழிலாளர்களுக்கு வேலை பற்றிய அறிவு என்ன இருக்கிறது, அவர்கள் எவ்வாறு வேலை செய்கின்றனர், அவர்கள் வேலை திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையைக் காணவேண்டும்.

இரண்டு, வேலை செய்யும் முறையை சில சட்ட கோட்பாடுகளாக மாற்றவேண்டும். மூன்று, ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அவ்வேலையைச் சிறப்பாகச் செய்ய பயிற்றுவிக்கவேண்டும். நான்கு, ஒவ்வொரு தொழிலாளருக்கும் திறன் அளவு கோலை நியாயமாக நிர்ணயித்து அவர்களின் செயல் திறனுக்கு ஏற்ப ஊதியம் வழங்கவேண்டும். இவ்வாறான பல கோட்பாடுகளை உருவாக்குவதும் அதனை பின்பற்றுவதும் மேலாண்மை அறிவியலின் நோக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in