

கிராம மக்களுக்கு இலவச செல்போன் வழங்குவது மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும் இத்திட்டத்தை தொலைத் தொடர்புத்துறை ஆணையம் (டிசி) பரிந்துரைத்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறையின் உயர் அதிகாரம் மிக்க அமைப்புதான் இந்த ஆணையம். இந்தத் திட்டத்துக்கு ஆணையம் ஒப்புதல் அளித்தபிறகு அது மத்திய அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த இலவச செல்போன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 2.5 கோடி கிராம மக்கள் பயனடைவர். கிராமப் பகுதியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டேப்லெட் பிசி-க்கள் வழங்கப்படும்.
ஆண்டுக்கு ரூ. 360 ரூபாய்க்கு செல்போன் ரீசார்ஜ் இலவசமாக இரண்டு ஆண்டுகளுக்குச் செய்து தரப்படும். இதன் மூலம் 30 நிமிஷம் பேசவும், 30 எஸ்எம்எஸ்களை அனுப்பவும், 30 எம்பி வரை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இதேபோல டேப்லெட் பிசியுடன் இணையதள இணைப்புடன் கூடிய சிம் கார்டு வழங்கப்படும். இதன் நினைவகத் திறன் 500 எம்.பி.யாகும். மாணவர்கள் ரூ.75 வரை பேசவும், 75 குறுஞ்செய்திகளை அனுப்பவும் முடியும். இந்தத் திட்டம் 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.