

சென்னை போன்ற நகரங்களில் இன்று வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு முக்கியப் பங்குண்டு. இதனால் இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரு நகரங்களில் தவிர்க்க முடியாததாகி விட்டன.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் பின்னர் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. அடுக்குமாடி வீடு வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இதுபற்றிச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் வழிகாட்டுகிறார்.
‘‘எஃப்.எஸ்.ஐ. எனப்படும் கட்டிடத் தளப் பரப்பு குறியீடு தமிழகத்தில் பொதுவாக ஒன்றரை மடங்கு(1.5) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் 700 சதுர அடியில் மனை வைத்திருந்தால், கட்டிடத் தளப் பரப்பு குறியீட்டின்படி 400 முதல் 450 சதுர அடியில்தான் வீடு கட்ட வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் இது பொருந்தும். அதாவது அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆயிரம் சதுர அடி வீடு என்றால், ஒப்பந்தத்தின் போது பிரிக்கப்படாத பங்குப்படி 666 சதுர நமக்குக் கொடுப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் எல்லோருக்கும் இப்படிப் பிரித்துக் கொடுப்பார்கள்.
அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனை செய்யும் போது திட்ட வரைபடத்தைக் காட்டுவார்கள்.
திட்ட வரைபடத்தில் இருப்பது போலவே குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வீடுகள் கட்டப்படுகின்றன என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். சில சமயம் 50 வீடுகள் கட்டப்போவதாகக் கூறிவிட்டுக் கூடுதலாகவும் வீடு கட்டி விடுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத் திட்டங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ள, வரைபடங்களில் உள்ள சமையலறைகளை எண்ணினால் போதும், ஒப்புதல் பெறப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ளலாம். ( எந்தக் குடியிருப்பு வீட்டுக்கும் ஒரே ஒரு சமையலறைதான் உண்டு என்பது மாறாத விதி). தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவதற்குத் திட்ட அனுமதி பெறக் குறைந்தபட்சம் 600 சதுர அடி நிலமாவது இருக்க வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் மாடியின் உரிமை பற்றி ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் மாடியில் கூடுதலாக வீடு கட்டுவோம், மாடிக்கு யாரும் செல்லக் கூடாது, மாடி உரிமை கட்டுநருக்கே சொந்தம் என்பது போன்ற விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தால் கவனமாகப் படித்துப் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் வழக்கறிஞர் ஆலோசனையும் பெறுவது நல்லது.
தமிழகத்தைப் பொறுத்தவரைக் கணிப்பொறி சார்ந்த தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டும் கட்டிடங்களுக்குச் சலுகைகள் உண்டு. அதாவது பொது எஃப்.எஸ்.ஐ.-யைவிட ஒன்றரை மடங்கு அதிக எஃப்.எஸ்.ஐ.க்கு அனுமதி உண்டு. திறந்தவெளி ஒதுக்கீடு
இடம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குக் குத்தகையின் பேரில் வழங்கப்படும். இதேபோலக் கட்டிடம் கட்டும் இடத்தைச் சுற்றிச் சாலைகள் அமைக்கக் குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. இதைப் பிரீமியம் எஃப்.எஸ்.ஐ. என்று கூறுவார்கள். பிரீமியம் எப்எஸ்ஐ என்பது கட்டிடம் கட்டும் இடத்திற்குச் செல்லும் சாலையின் அகலத்தைப் பொருத்து மாறுபடும். இதற்குத் தமிழகம் முழுவதும் சி.எம்.டி.ஏ. விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன.
எனவே அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க முடிவு செய்துவிட்டால், மேற்கூறிய விதிமுறைகள், திட்ட வரைபடங்கள், கட்டுநருடனான ஒப்பந்தம் பற்றி தீர விசாரித்துச் செயல்படுவது நல்லது.