

நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் மாதம் 30-ம் தேதி வரை தாக்கல் செய்வதற்கு கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஜூலை 14-ம் தேதி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிபிடிடி) செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. நிறுவனங்கள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு நீட்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என தணிக்கைத் துறையைச் சேர்ந்தவர்கள் சிடிபிடி-யிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நவம்பர் 30 என சிடிபிடி அறிக்கை கூறியது. அத்துடன் கூடுதல் வரி செலுத்தப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெறுவதற்கான (ரிட்டர்ன்) தாக்கல் செய்யும் தேதியை நீட்டிக்க முடியாது என தெரிவித்தது. தணிக்கை அறிக்கைக்கு கூடுதல் அவகாசமும், ரிட்டர்ன் தாக்கலுக்கு அவகாசமும் அளிக்கப் படாதது முரணான செயல் என நீதிமன்றங்களில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து தணிக்கை கணக்கு மற்றும் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக சிடிபிடி அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கால தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு விதிக்கப் படும் அபராதம் அக்டோபர் 1-ம் தேதி முதல் கணக்கிடப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.