Last Updated : 31 Dec, 2013 11:22 AM

 

Published : 31 Dec 2013 11:22 AM
Last Updated : 31 Dec 2013 11:22 AM

கார்ல் மார்க்ஸின் பொருளியல் சிந்தனை - என்றால் என்ன?

கார்ல் மார்க்ஸ் (1818-83) ஒரு ஜெர்மானிய தத்துவ நிபுணராக அறியப்பட்டாலும், அவரின் சிந்தனைகள், தத்துவம், பொருளியல், சமூகவியல், அரசியல், வரலாறு, இலக்கியம் என பலதுறைகளில் இருந்தன. இன்றும் இவரின் சிந்தனைகள் இத்துறைகளில் மட்டுமல்லாது மற்ற துறைகளில் உள்ளவர்களும் ஊன்றி படித்து தெரிந்துகொள்ள முயல்வது இவர் சிந்தனையின் சிறப்பு. படித்தவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நேரத்திலாவது மார்க்ஸின் சிந்தனையைத் தொடாமல் இருந்திருக்க முடியாது.

வரலாற்று மாற்றம் என்பதே சமுதாய குழுக்களிடையே உள்ள மோதல்களில் தான் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியவர். வரலாற்றின் ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தின் ஒரு குழுவினர் உற்பத்தி சாதனைகளை சொந்தம் கொண்டாடுவதால் அக்குழுவினர் சமுதாயம் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார். மற்றொரு குழுவினர் தங்கள் நலனுக்காக ஆதிக்கக் குழுவினரோடு மோதலைக் கடைப்பிடிப்பதால், பழைய ஆதிக்க குழுவிற்குப்பதில் புதிய ஆதிக்க குழுக்கள் உருவாகும்.

நில பிரபுத்துவ முறையில், நிலத்தை கையகப்படுத்திய நிலப்பிரபுக்கள் ஆதிக்க சக்தியாகவும், அதன் வழியில், முதலாளித்துவ முறையில் தொழில் முதலீடுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முதலாளிகள் ஆதிக்க சக்தியாகவும் இருந்தனர்.

முதலாளித்துவ முறையில், உழைப்பாளர்களுக்கு குறைந்த கூலியைக்கொடுத்து, சுரண்டலைக் கையாண்டு அதிக லாபம் பார்க்கக் கூடிய வழிமுறையை முதலாளிகள் கடைபிடித்ததாக கார்ல் மார்க்ஸ் குற்றம் சாட்டினார். இந்த சுரண்டல் முறை தொடரும் போது சொத்துகள்கொண்ட முதலாளிகளுக்கும், சுரண்டப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, பின்னர் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் தொழிலார்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படக்கூடிய சமுதாய மாற்றம் நிகழும் என்று மார்க்ஸ் வாதிட்டார். சோஷலிச சமுதாயத்தில் எல்லா உற்பத்தி சாதனங்களும் அரசுக்கு சொந்தமானதாகவும், பின்னர் எல்லா சொத்துகளும் மக்களால் கூட்டாக சொந்தம் கொண்டாடக்கூடிய நிலையான கம்யூனிச சமுதாயம் உருவாகும் என்று மார்க்ஸ் கூறினார். சோஷலிச சமுதாயத்தில் அரசு முதலாளிகளின் சுரண்டலை முழுவதுமாகத் தடுக்கும். கம்யூனிச சமுதாயத்தில் எல்லாருக்கும் தேவையான அளவில் பொருட்களும், பணிகளும் வழங்கப்படும். இதில் அரசு என்ற அமைப்பு மறைந்து போகும்.

எங்கெல்லாம் ஏற்றதாழ்வுகள் நிலவுகிறதோ அங்கெல்லாம் மார்க்ஸ் இருப்பது உறுதி. எனவே மார்க்ஸ் என்றும் நம்முடைய சிந்தனைகளை வடிவமைப்பதில் மிக முக்கிய சக்தியாகவே இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x