ஆசிய பசிபிக் நாடுகளின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஆசிய பசிபிக் நாடுகளின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Updated on
2 min read

ஆசிய பசிபிக் நாடுகளில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த பட்டியலில் 12.60 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்ட ஜப்பான் முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.

நியூ வேர்ல்டு வெல்த் என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆசிய பசிபிக் நாடுகள் 2016 தனிநபர் சொத்து குறித்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. அதிக சொத்து கொண்டவர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது முக்கியமானது.

இந்த பணக்காரர்கள் சுமார் பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கு மேலும் சொத்து கொண்டவர்களாக உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்டுள்ளனர்.

2015 ஆண்டு இறுதி நிலவரப் படி ஜப்பானில் 12.60 லட்சம் கோடீஸ்வரர்கள் என்று பட்டியல் குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. இங்கு 6.54 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் 2.90 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில், ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது. இங்கு 2.24 லட்சம் பணக்காரர்கள் உள்ளனர். ஹாங்காங் 2.15 லட்சம் பணக்காரர்களுடன் ஆறாவது இடத்திலும், தென் கொரியா 1.25 லட்சம் பணக்காரர்களுடன் ஏழாவது இடத்திலும், 98,200 பணக்காரர்களுடன் தைவான் எட்டாவதாகவும் வந்துள்ளன. நியூசிலாந்து 89,000 பணக்காரர் களுடன் 9 வது இடமும், இந்தோ னேசியா 48,500 பணக்காரர்களுடன் பத்தாவதாக இடம் பிடித்துள்ளன.

தனிநபர் வருமானம் குறைவாக உள்ள இந்தியா இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.

இந்திய தனிநபர்களின் சொத்து மதிப்பு 4,36,500 கோடி டாலர்களாக உள்ளது. இதனோடு ஒப்பிடுகிறபோது சீனா தனிநபர்களின் சொத்து மதிப்பு 17,25,400 கோடி டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தனிநபர்களின் சொத்து மதிப்பு என்பது அவர்களது முதலீடுகள், தொழில், மற்றும் சொத்துக்கள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது,

தனிநபர்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டால் இந்தியா இந்த பட்டியலில் கடைசி மூன்று இடங்களுக்குள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சராசரி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 2.10 லட்சம் ரூபாய் என்று குறிப்பிடும் அந்த ஆய்வு, ஆஸ்திரேலியாவில் தனிநபர் வருமானம் 1.22 கோடி ரூபாயாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆசிய பசிபிக் நாடுகளில் தனிநபர் வருமானத்தில் ஆஸ்தி ரேலியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் தனிநபர் வருமானம் மிகக் குறைந்த அளவாக 96,000 ரூபாய் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டும் சுமார் 35 லட்சம் கோடீஸ் வரர்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு 17.7 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 4,83,000 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in