

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது, நகர்ப்புறங்களில் பொருள்களுக்கு தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.8 சதவீத அளவுக்கு உயரும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (அசோசேம்) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருந்தது. இந்நிலை நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும். பருவ மழை பெய்துள்ளதால் வேளாண் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் வேளாண் பொருள்களுக்கான தேவை அதிகமாக இருப்பது, சேவைத்துறை, உற்பத்தித் துறையில் வளர்ச்சி ஆகிய காரணங்களால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.8 சதவீத அளவுக்கு உயரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் வழக்கமாக பெய்யும் அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இப்போதும் குறைவை சாகுபடி தொடங்கியுள்ளது. எப்படியிருப்பினும் குறுவை சாகுபடி அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அசோசேம் பொதுச் செயலர் டி.எஸ். ராவத் தெரிவித்தார்.
இந்தியா விவசாய நாடாக இருந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயத்தின் பங்களிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டது. ஜிடிபி-யில் விவசாயத்தின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
நடப்பு நிதி ஆண்டில் வேளாண் துறை வளர்ச்சி 5.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயரும் என்று அசோசேம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என்று அசோசேம் சுட்டிக் காட்டியுள்ளது. விவசாயம் மற்றும் தொழில்துறையில் ஒரு சதவீத அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டால் அது பொருளாதார வளர்ச்சியில் 0.4 சதவீதம் முதல் 0.6 சதவீத அளவுக்கு அதிகரிக்கும்.
2013 மார்ச் வெளியான ஜிடிபி அட்டவணைப்படி சேவைத்துறை பங்களிப்பு 59.6 சதவீதமாகவும், தொழில்துறை பங்களிப்பு 24.8 சதவீதமாகவும், முதன்மைப் பொருள்கள் துறை பங்களிப்பு 15.6 சதவிதமாகவும் இருந்தது.